தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ரயில் தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக இன்று (3.8.2024) முதல் 14.8.2024 புதன்கிழமை வரை காலை 9.30 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை பல்லாவரம் மற்றும் கூடுவாஞ்சேரி இடையிலான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் ரயில் போக்குவரத்து சென்னை கடற்கரை முதல் பல்லாவரம் வரையிலும் மற்றும் கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு வரையிலும் மட்டுமே இயக்கப்படும். எனவே, 3.8.2024 முதல் 14.8.2024 வரை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தால் சிறப்பு பேருந்துகள் பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வழியாக செங்கல்பட்டு வரையிலும் மீண்டும் செங்கல்பட்டு முதல் கூடுவாஞ்சேரி வழியாக பல்லாவரம் வரையிலும் இயக்கப்பட உள்ளது.
பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் அனைவரும் தாம்பரம், இரும்புலியூர் பேருந்து நிலையம், இந்துமிஷன் மருத்துவமனை பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும், பாதுகாப்பு பணிக்காகவும் 175 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.