சென்னை: செங்கல்பட்டு – சென்னை கடற்கரை வழித்தடங்களில் மின்சார ரயில் ரத்து காரணமாக தாம்பரம் பேருந்து நிலையத்தில் கடந்த 2 நாட்களாக கடும் கூட்டம் நெரிசல் காணப்பட்ட நிலையில், இன்று கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். மறுசீரமைப்பு மற்றும் மேம்பாடு பணி காரணமாக தாம்பரம் ரயில் நிலையத்தில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடற்கரையில் இருந்து வரும் ரயில்கள் பல்லாவரம் வரையும், செங்கல்பட்டில் இருந்து வரும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரையும் இயக்கப்படுவதால் இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், அலுவலகம் செல்வதற்காக மாநகர பேருந்துகளை நோக்கி பயணிகள் படையெடுத்ததால் கடந்த 2 நாட்களாக தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேலும், கூட்ட நெரிசலால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இன்று கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதால் கடந்த 2 நாட்களை காட்டிலும் கூட்ட நெரிசல் குறைந்து பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். தாம்பரம் ரயில்வே பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.