சென்னை: நீட் தேர்வை ரத்துச் செய்யக் கோரி நாளை முதல் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக இளைஞர் அணி-மாணவர் அணி, மருத்துவர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடந்தது. இதில் கலந்து கொண்டு திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் ‘நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் மனநிலை நீர்த்துப்போக வில்லை. அந்த எதிர்ப்பு அப்படியே இருக்கிறது’ என்பதை ஒன்றிய அரசுக்கு உணர்த்தும் வகையில், அந்தப் உண்ணாவிரத அறப்போராட்டம் அமைந்திருந்தது. அதற்கான முன்னெடுப்பாகத்தான் வருகின்ற 21ம் தேதி(நாளை) கையெழுத்து இயக்கத்தை நாம் தொடங்கவுள்ளோம்.
50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளைப் பெறும் வகையில் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை இந்திய ஒன்றியத்துக்கு உணர்த்தும் வகையில் இந்தக் கையெழுத்து இயக்கம் இருக்க வேண்டும். மக்களின் கையெழுத்துகளைப் பெறுவதற்காகப் போஸ்ட் கார்ட் மற்றும் இணையதளம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. போஸ்ட் கார்டு என்பது ஓர் அடையாளத்துக்குத்தான். அனைவரின் கையெழுத்தையும் டிஜிட்டலாகப் பெற வேண்டும் என்பதுதான் நம்முடைய முழு இலக்கு. 50 நாட்களில் பெறப்படும் கையெழுத்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர்அணியின் மாநாட்டில் அவர்களுடைய கையில் ஒப்படைக்கப்படும்.
பிறகு முறைப்படி அறிவாலயத்தின் வழியாக, அவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்படும். மாநாட்டுக்கு இன்றிலிருந்து சரியாக இன்னும் 59 நாட்களே உள்ளன. 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் என்று இலக்கு வைத்துள்ளோம். கையெழுத்துப் பெறும்போது எதற்காக இந்தக் கையெழுத்துப் பெறுகிறோம் என்பதைப் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லவும். தேவையெனில், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டியதன் அவசியம் குறித்த துண்டறிக்கைகளைவிநியோகம் செய்தும் கையெழுத்துப் பெறலாம்.
இவை தவிரக் கல்லூரிகளுக்கு முன்பு மாணவர்களின் கையெழுத்துகளைப் பெறலாம். அது இந்த இயக்கத்தை இன்னும் மக்களிடம் நெருக்கமாகக் கொண்டுபோய்ச் சேர்க்க உதவும். திருமண மண்டபம் போன்ற இடங்களை முன்பதிவு செய்து, பொதுமக்களை, மாணவர்களை அழைப்பது போன்ற பணிகளை இப்போதிலிருந்தே தொடங்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் 72 மாவட்டங்களில் சென்னையில் உள்ள 6 மாவட்டங்களுக்கும் சேர்த்து, கலைவாணர் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இது தவிர, மீதி 66 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக இந்தக் கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்தக் கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக முடிக்க ஒத்துழைப்புத் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.