சுரண்டை: சுரண்டை செண்பக கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பால் இலந்தைகுளத்து தண்ணீர் பச்சை நிறமாக மாறியதோடு அதில் குவிந்துக்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குளத்தை கடந்து செல்லும் போது பொதுமக்கள் துர்நாற்றத்தின் காரணமாக மூக்கை மூடி கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், சுரண்டை நகரின் மையப்பகுதியில் செண்பக கால்வாய் செல்கிறது. ஒரு காலத்தில் கால்வாயில் இரண்டு புறமும் செண்பக மலர்கள் பூத்துக் குலுங்கியதால் செண்பக காலவாய் என்கிற பெயர் வந்தது. அவ்வளவு சிறப்பு மிக்க செண்பக கால்வாய் இன்று கூவமாக மாறிக்கொண்டு வருகிறது. கழிவுநீரை கடத்தி செல்லும் கால்வாயாக சிலர் மாற்றி விட்டனர். இந்த கால்வாயில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், இரவு நேரத்தில் திறந்து விடப்படும் கழிவறை கழிவுகள், மருத்துவ கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் போன்றவற்றால் துர்நாற்றம் வீசி வருகிறது. இரட்டை குளத்தில் இருந்து இந்த செண்பக கால்வாய் சுரண்டையில் முக்கியப் பகுதி வழியாக வந்து இலந்தைகுளத்தில் இணைகிறது. இதனால் செண்ப கால்வாய் கொட்டப்படும் கழிவுகள் அப்படியே இலந்தை குளத்தில் வந்து சேர்ந்து தேங்கி விடுகிறது.
இதனால் இலந்தை குளத்து தண்ணீர் பச்சை நிறமாக பாசி படர்ந்து காணப்படுகிறது. இந்த குளத்தை கடந்து செல்லும் பொதுமக்கள் துர்நாற்றத்தின் காரணமாக மூக்கை மூடி கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய்வாய்ப்படுகிரார்கள். எனவே சுரண்டை நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சுரண்டை சேர்மன் வள்ளி முருகன் கூறுகையில் ‘‘செண்பக கால்வாயை சீரமைக்க பல முறை தமிழக அரசிடம் மனு கொடுத்துள்ளோம். நிதி நெருக்கடி சீரானதும் விரைவில் அதற்கான நிதி ஒதுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு ஒவ்வொரு முறையும் அறிவுறுத்தி வருகிறோம். விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஆனால் பெரும்பாலான பொதுமக்கள் குப்பைகளை பிரித்து வழங்குவதில்லை.
மேலும் வீட்டில் பயனற்று போகும் பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்காமல் கால்வாயில் வீசி செல்லும் சம்பவம் நடந்து வருகிறது. கோழி கழிவுகள், மருத்துவ கழிவுகள், கழிவறை கழிவுகள் கால்வாயில் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தயவு தாட்சன்யம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். இலந்தை குளத்தில் துர்நாற்றம் வீசாதபடி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. இலந்தைகுளத்தை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது விரைவில் முழுமையாக சுத்தப்படுத்தும் பணி நிறைவடையும்’’ என்றார்.