சென்னை: சென்னையில் உள்ள கால்வாய்களில் ஆகாய தாமரைகளை அகற்றுவதற்கு நீரிலும், நிலத்திலும் இயங்கக்கூடிய நவீன இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது, என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 3.5 மீ. அகலத்திற்கு அதிகமாக உள்ள கால்வாய்களில் ஆகாய தாமரைகள், மிதக்கும் கழிவுகள் மற்றும் சகதிகளை அகற்றிடும் வகையில், நீரிலும், நிலத்திலும் இயங்கக்கூடிய தன்மை வாய்ந்த ட்ரெயின் மாஸ்டர் எனப்படும் இயந்திரம் வாடகை அடிப்படையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்த உபகரணம் 3.5 மீட்டருக்கு மேல் அகலம் கொண்ட கால்வாய்களில் 4.4 மீட்டர் வரை ஆழமாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளும். தற்போது இந்த இயந்திரம் 3 கி.மீ. நீளம் கொண்ட கேப்டன் காட்டன் கால்வாயில் ஆகாயத்தாமரைகள் மற்றும் மிதக்கும் கழிவுகளை அகற்றி, வண்டல்கள் தூர்வாரும் பணியினை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.