சென்னை: கால்வாயை ஆக்கிரமித்து பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் கட்டிய கட்டடத்தை 3 மாதங்களில் அகற்ற ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீர்வழிப்பாதையில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, பேரூராட்சி தலைவர் சுபா பிரியா கட்டிடம் கட்டியுள்ளார். கால்வாய் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. மழை காலங்களில் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி விடுவதால், ஆக்கிரமிப்பை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ் பாபு அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. பேரூராட்சி தலைவர் சுபா பிரியா உள்ளிட்ட 8 பேர் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளனர் என தாசில்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் அணைக்கட்டு தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்தார். பேரூராட்சி தலைவரால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை 3 மாதத்தில் அகற்ற உத்தரவிட்டு ஐகோர்ட் வழக்கை முடித்து வைத்தது.