சென்னை: வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக கனடா சென்றுள்ளார். ஒட்டாவா மாகாணத்தில் கனடா அரசால் பராமரிக்கப்பட்டு வரும் மேஜர் ஹில் பார்க் பூங்காவை பார்வையிட்டார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக கனடா நாட்டிற்கு வருகை தந்து, ஒட்டாவா மாகாணத்தில் கனடா அரசால் பராமரிக்கப்பட்டு வரும் மேஜர் ஹில் பார்க் பூங்காவை பார்வையிட்டார். ஒட்டாவா மாகாணத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்று, கனடா நாட்டின் இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மாவை சந்தித்தார்.
கனடா நாட்டின் விவசாய வளங்களை பற்றியும் கனடா நாட்டில் பயன்படுத்தப்படும் உயரிய வேளாண் உற்பத்தி தொழில்நுட்பங்களையும் அங்கு அறுவடைக்கு பின் செய் நேர்த்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் ஏற்றுமதி போன்றவற்றை அவர் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் கனடா நாட்டிற்கு சென்று பல்வேறு வேளாண் உத்திகளை கண்டறியும் வகையில் மாணவர்கள் பரிமாற்றம் தொடர்பாகவும், விவசாயிகளுக்கு தரமான உரம் விநியோகிக்கும் வகையில் ஆராய்ச்சி செய்வது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஒட்டாவா மாகாணத்தில் கார்சொனோபி கிராமத்திற்கு சென்று, அங்கு சோயா மொச்சை மற்றும் மக்காச்சோளம், கோதுமை, ஓட்ஸ் பயிர்களையும் மற்றும் பழவகைகள் பயிரிடுவதையும் பார்வையிட்டார். அப்போது, வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.