ஆன்டாரியோ: கனடாவில் நடந்து வரும் கனடா ஓபன் பேட்மின்டன் போட்டியில் நேற்று, தமிழக வீரர் சங்கர் சுப்ரமணியன் அபார வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். கனடாவின் ஆன்டாரியோ நகரில், கனடா ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய ஆடவர் ஒற்றையர் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் சங்கர் சுப்ரமணியன் (21), தைவானை சேர்ந்த ஹுவாங் யு காய் (22) உடன் மோதினார்.
இப்போட்டியின் முதல் செட்டில் தைவான் வீரர் சவால் எழுப்பியபோதும் முறியடித்து அந்த செட்டை 21-19 என்ற புள்ளிக் கணக்கில் சங்கர் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டை அவர் 21-14 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தி போட்டியில் வெற்றி பெற்றார். இதன் மூலம், சங்கர் சுப்ரமணியன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். நேற்று நடந்த மற்ற ஆடவர் சுற்றுப் போட்டிகளில் ஜப்பான் வீரர் நிஷிமோடோ, மலேசிய வீரர் விக்டர் லாய் வெற்றி பெற்றனர்.