?கடவுள் அன்பு மயமானவர் என்கிறார்கள். ஆனால், சில கடவுள்கள் உதாரணமாக காளி, துர்க்கை, நரசிம்மர், காட்டேரி, சாமுண்டி, அய்யனார் போன்ற சிலைகள் பயமுறுத்தும் தோற்றத்தில் உள்ளனவே! அன்பு மயமான கடவுள் இப்படி அச்சமூட்டும் உருவத்தில் ஏன் தோன்றுகிறார்கள்?
– சுமதி சடகோபன், திருவாமாத்தூர்.
குழந்தைகள் தவறு செய்யக்கூடாது என்பதற்காக, ‘சாமி கண்ணைக் குத்திடும்’ என்று பயமுறுத்தி வைத்த பாரம்பரிய வழக்கம் ஒன்று இருந்தது. இப்போதும் சில வீடுகளில் அந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். கடவுளின் கருணை காரணமாக, அவர் நேரடியாக நமக்கு தரிசனம் தருவதில்லை என்பதற்காக, அவர் மீதான மதிப்பும், மரியாதையும் குறைந்துவிடக்கூடாது; அவர் மீது பயம் தோன்ற வேண்டும். அப்போதுதான் அவர் மீதான பக்தி வளரும் என்பது சிலருடைய வாதம். அந்த வகையில் கடவுள் உருவங்களை பயம் தோன்றும்படியாக வடிவமைத் திருப்பார்கள் என்றும் சொல்வார்கள். ஆனால், கடவுள் தீயவைகளை அழிக்கக் கூடியவர். எங்கெங்கெல்லாம் தீமை முளைக்கிறதோ அங்கெங்கெல்லாம் இறைவன் தோன்றுகிறார். அப்படி அழித்த பிறகு, அவர் தோன்றிய உருவத்திலேயே சிலையாக மாறி, அந்தப் பகுதி மக்களுக்குத் தொடர்ந்து நல்வழி காட்டுகிறார். அதுமட்டுமல்ல, அந்த கடவுள் உருவங்களை பார்க்கும்போது, மனம் சலனப்பட்டு தவறான வழியில் போக முயற்சிசெய்பவர்கள் கடவுள் நம்மை தண்டித்துவிடுவார் என்று பயந்து அந்த எண்ணத்தையே மாற்றிக்கொண்டுவிடவும் வாய்ப்புள்ளது. இரண்யனுக்கு கொடியவராகத் தெரிந்த நரசிம்மர், பிரகலாதனுக்கு இனியவராகத் தெரியவில்லையா?
?வீட்டிற்குள் பஜனை செய்யலாமா? வீட்டிற்குள் ஜால்ரா தட்டக்கூடாது என்கிறார்களே?
– தி. சுந்தரராஜன், சின்ன காஞ்சிபுரம்.
வீட்டுக்குள் சண்டைதான் போட்டுக் கொள்ளக்கூடாது. அந்த சண்டை சத்தம் வெளியே கேட்கக்கூடாது. இதில் வேடிக்கை என்ன வென்றால் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், பெரும்பாலும் பக்கத்து வீட்டுச் சண்டையைக் கேட்டு ரசிப்பார்கள்; ஆனால், அதே வீட்டிலிருந்து ஏதாவது பஜனை சத்தம் கேட்டால் சண்டைக்கு வருவார்கள்!
இது இருக்கட்டும். வீட்டினுள் தாராளமாக பஜனை செய்யலாம். ஜால்ரா சத்தம் மட்டுமல்ல… மேளம், ஆர்மோனியம் போன்ற இசைக் கருவிகளையும் பயன்படுத்தலாம். ஒரே ஒரு கண்டிஷன் – அது அக்கம் பக்கத்தவர்களுக்கு எரிச்சல் தராமல் இருக்க வேண்டும். பொதுவாகவே, வீட்டிற்குள் இனிமையான ஒலி கேட்பது, வீட்டினுள் இருக்கக்கூடிய நல்தேவதைகளை சந்தோஷப்படுத்தும். ஜால்ரா, மணி, மேள ஒலிகள் துர்தேவதைகளை வீட்டை விட்டு விரட்டும்; திருஷ்டிகளைத் துரத்தும். பஜனையை மாலை நேரங்களில் குறிப்பாக 5 முதல் 7 மணிக்குள்ளாக வைத்துக் கொள்வது வசதியானதாக இருக்கும். இதில் இன்னொரு நற்செயலையும் மேற்கொள்ளலாம். அதாவது பக்கத்து வீட்டுக்காரர்களையும் உங்கள் வீட்டு பஜனையில் சேர்த்துக்கொள்ளலாம். அவர்களுக்கு பிரசாதம் வழங்கலாம். அன்பையும் ஆன்மிகத்தையும் பகிர்ந்துகொள்ளலாம். ‘நாளைக்கு எங்க வீட்ல பஜன் வைத்திருக்கிறோம், நீங்க அவசியம் வந்து கலந்துக்கணும்’ என்று அவர்களே சொல்லும் அளவுக்கு நெருங்க வேண்டும்.
?பொதுவாகவே ஒவ்வொரு மதத்திலும் உட்பிரிவுகளும் மாறுபட்ட வழிபாட்டு முறைகளும் இருப்பது ஏன்?
– சுமலதா, காளஹஸ்தி.
பெரும்பாலும் மத நம்பிக்கைகளும், வழிபாடுகளும் வழிவழியாக வருபவை. நம் மூதாதையர் சொன்னதையும், செய்ததையும் நாம் பின்பற்றுகிறோம். அவ்வாறு பின்பற்றும்போது, சில விஷயங்களை நம் கற்பனையுடன் சேர்த்து மெருகூட்டுகிறோம் அல்லது நம் நம்பிக்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப வழக்கத்தில் இருக்கும் முறைகளை மாற்றவோ, புதுப்பிக்கவோ செய்கிறோம். அடிப்படை கொள்கைகளுக்கு விரோதமில்லாத வகையில், அதே நம்பிக்கைக்குட்பட்ட பிறரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அந்த மாற்றங்கள் அமைகின்றன. அதனால்தான் இந்த பலதரப்பட்ட வழிபாட்டு முறைகள்.