* பதில் தெரியாமல் இருக்கும் கல்லூரிகள்
சென்னை: இன்ஜினியரிங் கல்லூரிகளில் வழக்கமாக நடைபெறும் ஐ.டி. நிறுவனங்களின் வளாக நேர்காணல் இதுவரை எங்கும் நடக்கவில்லை. இது, இன்ஜினியரிங் கல்லூரிகளில் படித்து வரும், படிப்பை முடிக்க இருக்கும் மாணவர்களுக்கு பெரிய ஏமாற்றமாக உள்ளது. மேலும், மாணவ-மாணவிகளின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இன்ஜினியரிங் கல்லூரிகளில் தகவல் தொழில் நுட்பம் (ஐ.டி.), தகவல் தொழில்நுட்பம் தயாரிப்பு சார்ந்த நிறுவனங்கள் கடந்த ஆண்டு (2022) அதிகளவில் கல்லூரி வளாக நேர்காணலில் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கினர். ஆனால், இந்த ஆண்டு அது தலைகீழ்நிலையில் உள்ளது. டி.சி.எஸ்., விப்ரோ, காக்னிசன்ட் போன்ற தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் இன்னும் வளாக நேர்காணலை தொடங்கவில்லையாம்.
தமிழ்நாட்டில், வழக்கமாக கல்லூரிகள் தொடங்கப்பட்ட 4 மாதங்களுக்குள் வளாக நேர்காணலை நடத்தி முடிந்துவிடும். அதன்படி, தமிழ்நாட்டில் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, பல மாதங்கள் கடந்துள்ளது. இந்நிலையிலும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் இதுவரை வளாக நேர்காணலுக்கு வராமல் இருப்பது மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு குறித்த சந்தேகத்ைத அதிகப்படுத்தி உள்ளதாக கல்வியாளர்கள் கூறினர். உலகளாவிய பொருளாதார சூழ்நிலை காரணமாக, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் ஊழியர்களை அமர்த்தும் நிறுவனங்கள் அப்பணியை தொடங்கவில்லை என்றும், சில நிறுவனங்கள் வருகிற அக்டோபர் மாதம் வரை காத்திருக்க கல்லூரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. சில கல்லூரிகளில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் ‘அக்சென்ட்சர்’ பிரிவில் மட்டும் பணி அமர்த்தும் பணி நடந்து வருகிறதாம்.
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் வளாக நேர்காணல் மூலம் பணி அமர்த்தும் பணி கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு இன்னும் தொடங்கவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயமாக மாணவர்கள் பார்க்கின்றனர். இருப்பினும் அக்டோபர் மாதத்துக்கு பிறகு வளாக நேர்காணல் செய்ய கல்லூரிக்கு வருவதாக சில ஐடி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அதிக வேலைவாய்ப்புகள் மாணவ-மாணவிகளுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என கல்லூரி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் வளாக நேர்காணல் மூலம் பணி ஊழியர்களை அமர்த்துவதில் தற்போது தொய்வு இருந்தாலும், இது ஒரு குறுகிய காலம் மட்டுமே இருக்கும்.
உலகளாவிய பொருளாதார நிலைமை திருப்தி அளித்தவுடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணி அமர்த்தல் என்பது இதற்கு முந்தைய ஆண்டுகளைவிட அதிக எண்ணிக்கையில் இருக்கும் என்று ஐ.டி. நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் தெரிவித்தார். எனினும் மாணவர்கள் வளாக நேர்காணல் எப்போது என்று கேட்கும்போது அது குறித்து உறுதியான தகவல்கள் வரவில்லை என்று கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிக்கும் நிலையே உள்ளது. சில கல்லூரிகளில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் ‘அக்சென்ட்சர்’ பிரிவில் மட்டும் பணி அமர்த்தும் பணி நடந்து வருகிறதாம்.