Wednesday, June 19, 2024
Home » அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லூரிகளில் வளாக நேர்காணல்: இளநிலையில் 896 பேருக்கு வேலைவாய்ப்பு, மேலும் எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தகவல்

அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லூரிகளில் வளாக நேர்காணல்: இளநிலையில் 896 பேருக்கு வேலைவாய்ப்பு, மேலும் எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தகவல்

by Ranjith

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டில் நடந்த வளாக நேர்காணலில் இதுவரை 896 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. மேலும் ஜூன் 15ம் தேதிவரை நேர்காணல் நடக்கிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்ஜினியரிங் கல்லூரிகளில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் இறுதியாண்டில் வளாக நேர்காணல் (கேம்பஸ் இன்டெர்வியூ) மூலம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

இதில் பலருக்கு உயர்தரமான நிறுவனங்களில் கை நிறைய சம்பளத்திலும், சிலருக்கு நடுத்தரமான நிறுவனங்களில் ஓரளவுக்கு திருப்திப்படக் கூடிய வகையிலான ஊதியத்திலும் பணிகள் கிடைக்கும். ஆனால் 2023-24ம் கல்வியாண்டில் இறுதியாண்டு படிப்பை முடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வளாக நேர்காணல் என்பது உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாகவும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உயர்தர முக்கிய நிறுவனங்கள் அவர்களுக்கான பணியாட்களை தேர்வு செய்வதில் ஏற்பட்டுள்ள தொய்வு காரணமாகவும் தாமதம் ஆகிறது.

அதிலும் குறிப்பாக அண்ணா பல்கலைக் கழக வளாக கல்லூரிகளான கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.), கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் நேர்காணல் தொடங்கியது. இதேநிலைதான் பல இன்ஜினியரிங் கல்லூரிகளில் நீடித்தது. வளாக நேர்காணல் தாமதமாக தொடங்கிய நிலையில், பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்கக்கூடிய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த முக்கிய நிறுவனங்கள் தொடக்க நிலையில் எதுவும் பங்கேற்கவில்லை.

அண்ணா பல்கலைக்கழக வளாக நேர்காணலை பொறுத்தவரையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை இளநிலை, முதுநிலை மற்றும் எம்.பி.ஏ. படிப்புகளை முடித்த மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க இதுவரை 240 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில் டி.சி.எஸ். நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் நேர்காணலில் பங்கேற்றுள்ளது.
இதுவரையில் இளநிலை படிப்புகளை முடித்த மாணவ-மாணவிகளுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாக நேர்காணலில்,

கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் சார்ந்த பிரிவுகளில் 478 வேலைவாய்ப்புகளும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், சிவில் இன்ஜினியரிங், தயாரிப்பு தொழில்நுட்பம், தொழிற்சாலை இன்ஜினியரிங், உயிர்மருத்துவம் இன்ஜினியரிங் போன்ற பிரிவுகளில் 330 வேலைவாய்ப்புகளும், கெமிக்கல் இன்ஜினியரிங், செராமிக் தொழில்நுட்பம், உணவுத் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம், பெட்ரோலியம் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பம், ஜவுளி தொழில்நுட்பம் போன்ற தொழில்நுட்ப பிரிவுகளில் 88 வேலைவாய்ப்புகளும் ஆக, 896 பேருக்கு இதுவரை வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.

கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் 710 வேலைவாய்ப்புகளும், முக்கிய பிரிவுகளில் 537 வேலைவாய்ப்புகளும், தொழில்நுட்ப பிரிவுகளில் 196 வேலைவாய்ப்புகளும், ஆக 1443 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருந்தன.  2022-23ம் கல்வியாண்டுடன் ஒப்பிடுகையில், 2023-24ம் ஆண்டு வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் அண்ணா பல்கலைக்கழக வளாக நேர்காணல் அடுத்த மாதம், அதாவது ஜூன் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.

எனவே இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டை விட மேலும் அதிகரிக்கும் என அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதாகவே பல கல்லூரி நிர்வாகங்கள் கூறுகின்றன. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பெரிய நிறுவனங்கள் முழுமையாக பங்கேற்கும் வரை இன்ஜினியரிங் கல்லூரிகளில் வளாக நேர்காணலில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயேதான் இருக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

You may also like

Leave a Comment

nineteen − fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi