ஊட்டி : ஊட்டி நகராட்சி கூட்டத்திற்கு வாயில் கருப்பு துணிக் கட்டிக் கொண்டு வந்த திமுக பெண் கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி நகராட்சி நகர் மன்ற கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் வாணீஷ்வரி தலைமை வகித்தார். ஆணையாளர் காந்திராஜ் மற்றும் துணைத் தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கவுன்சிலர் பேசிய விவரம் வருமாறு: ஜார்ஜ் (திமுக):
கவுன்சிலர்களுக்கு தெரியாமல் ஏன் பூங்கா சாலையோர கடைகளுக்கு டெண்டர் வைத்தீர்கள். சாதாரண தகரத்தால் அமைக்கப்பட்ட அந்த கடைகளுக்கு எதற்காக ரூ.7500 வாடகை நிர்ணயம் செய்தீர்கள். குறைந்த வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். அதுவரை ஏலம் விடக்கூடாது. ஹிக்கன்ஸ் சாலையை சீரமைக்க வேண்டும். பேண்ட் லைன் பகுதியில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்க வேண்டும். சாலையில் கழிவு நீர் ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் போது, ஆண் மற்றும் பெண் கவுன்சிலர்கள் என பாகுபாடு பார்க்காதீர்கள். அனைவருக்கும் வளர்ச்சி பணிகளை சமமாக ஒதுக்கீடு செய்துக் கொடுக்க வேண்டும்.
முஸ்தபா (திமுக): ஊட்டி நகராட்சி பகுதிகளில் நீர் நிலைகளில் தண்ணீர் இருந்த போதிலும், செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, எல்க்ஹில் பகுதியில் 12 நாட்களுக்கு ஒரு முறையே தண்ணீர் வருகிறது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். டைகர்ஹில் அணையில் கூடுதலாக தண்ணீர் சேமித்து வைக்க தூர்வார வேண்டும். கழிவு நீர் கால்வாய் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு போதுமான உபகரணங்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
ஏடிசி பார்க்கிங் தளத்தை சீரமைத்து திறக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் வ ளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். படகு இல்லம் முன் அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் மூன்று மாடி கட்டிட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தம்பி இஸ்மாயில் (திமுக): வார்டில் ஆய்வு பணிகள் மேற்கொள்ள செல்லும்போது, அந்த வார்டு கவுன்சிலர்களையும் அழைத்து செல்ல வேண்டும். லோயர் பஜார் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காந்தல் பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்.
ரவி (திமுக): எல்க்ஹில் பகுதியில் 7 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் தண்ணீரை கூடுதல் நாட்கள் எடுத்துக் கொள்ளாமல் வழக்கம்போல், தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும். எம்பி நிதியில் நடைபாதை அமைத்துக் கொடுக்க வேண்டும். ரமேஷ் (திமுக): எனது வார்டில் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்பதற்காக சர்வே செய்ய அதிகாரிகளிடம் இரு மாதங்களாக வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இதுவரை சர்வே செய்ய அதிகாரிகள் யாரும் வரவில்லை. எனவே, உடனடியாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நடைபாதையை சர்வே செய்ய வேண்டும்.
அபுதாகீர் (திமுக): காந்தல் சிலேட்டர் அவுஸ் பகுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகிறது. இதனால், கடும் துரு நாற்றம் வீசுவது மட்டுமின்றி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நகராட்சி குடியிருப்புகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அதில் குடியிருப்பவர்களை வெளியேற நகராட்சி நிர்வாகம் தொடர் வற்புறுத்தி வருகிறது. அந்த குடியிருப்புக்களில் குடியிருப்புவர்களை வெளியேற்றாமல் ஒரு வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும், அந்த குடியிருப்புக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீதா (திமுக): எனது வார்டில் மழை நீர் கால்வாய் தூர் வாரப்படாமல் உள்ளதால், சிறிய மழை பெய்தால் அதில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது மட்டுமின்றி, குடியிருப்புக்களுக்குள் புகுந்து விடுகிறது. எனவே, காந்தல் கழிவு நீர் கால்வாயில் தூர்வார வேண்டும். அம்பேத்கார் நகர் பகுதியில் உள்ள கழிப்பிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
செல்வராஜ் (திமுக): நொண்டிமேடு பகுதியில் கழிவு நீர் கால்வாய் சீரமைக்கப்படாமல், குடியிருப்புக்களுக்கு ஊற்று நீர் போல் கழிவு நீர் வெளியேறுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நொண்டிமேடு பகுதியில் குப்பைகள் குவிந்துள்ளன. இதனை அகற்ற வேண்டும். மழை நீர் கால்வாய் சீரமைக்க வேண்டும். சத்துணவு பகுதியில் நிழற்குடை அமைத்து கொடுக்க வேண்டும்.
சகுந்தலா (அதிமுக): கோரிசோலா சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். இதன் மூலம் சீசன் சமயங்களில் இச்சாலையை மாற்றுப்பாதையாக பயன்படுத்த முடியும். டைஹர் ஹில் அணை தடுப்பு சுவர் பழுதடைந்து பல்வேறு இடங்களில் தண்ணீர் வெளியேறி வருகிறது. எனவே, தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும். தலையாட்டு மந்து பள்ளிக்கு தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்.
குமார் (அதிமுக): கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், ஓட்டல்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விசி காலனி பகுதியில் சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும்.
அன்பு (அதிமுக): ஓல்டு ஊட்டி பகுதியில் நடைபாதையில் கழிவு நீர் ஓடுகிறது. இதனை சீரமைக்க வேண்டும். தண்ணீர் குழாய்களை சீரமைக்க வேண்டும். ஆரணி அவுஸ் பகுதியில் உள்ள காட்டேஜ்கள் சாலைகளில் வாகனங்கள் நிறுத்திக் கொள்வதால், அப்பகுதி பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவிக்குமார், துணைத் தலைவர் (திமுக): கோடை காலத்தில் தண்ணீர் பிரச்னை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதாள சாக்கரை சீரமைக்கும் பணிகளுக்கு கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். பல்வேறு பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத்திற்கு ஒரு மினி ஜேசிபி மற்றும் டிப்பர் லாரிகளை வாங்க வேண்டும். படகு இல்லம் பகுதியில் உள்ள பழைய இரும்பு கடைகளை அகற்ற நடவடிக்ைக எடுக்க வேண்டும். மேலும், நகருக்குள் ஒர்க்ஷாப், வாட்டர் வாஷ் மற்றும் பழைய இரும்பு கடைகளை வைக்காமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகராட்சி கூட்டம் துவங்கியவுடன் கீதா, வனிதா, மேரிபுளோரினா, நாகமணி உட்பட திமுக பெண் கவுன்சிலர்கள் எங்களது கோரிக்கைகளை அதிகாரிகள் மற்றும் தலைவர் கேட்பதில்லை எனக்கூறி வாயில் கருப்புத்துணி கட்டி அமர்ந்தனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.