லண்டன்: பெரும் வெற்றித் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் சுற்றிலேயே முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் வெளியேறிய நிகழ்வு நடந்துள்ளது. முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமின்றி முன்னாள் சாம்பியன்கள், நட்சத்திர ஆட்டக்காரர்களும் இந்த சம்பவத்தில் தப்பவில்லை. அவர்களில் முக்கியமானவர் உலகத் தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரவ்(28). டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் உட்பட பல பட்டங்கள் வென்ற ஸ்வரவுக்கு கிராண்ட் ஸ்லாம் பட்டம் மட்டும் கனவாகவே உள்ளது. ஆஸி, பிரஞ்ச், யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பைனல் வரை முன்னேறியவர். ஏனோ விம்பிள்டன்னில் 4வது சுற்றை தாண்டியதில்லை. அந்த சோகம் இந்தமுறை முதல் சுற்றிலேயே தொடங்கி விட்டது.
இப்படி உலக தரவரிசயைில் முதல் 32 இடங்களில் உள்ள வீரர்களில் 12பேர் தங்களை விட பின் வரிசையில் உள்ள வீரர்களிடம் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறி உள்ளனர். அந்தப்பட்டியலில் லாரன்ஸ் முசெட்டி(இத்தாலி, 7வது ரேங்க்), ஹோல்கர் ருனே(டென்மார்க், 8வது ரேங்க்), டானில் மெத்வதேவ் (ரஷ்யா, 9வது ரேங்க்), ஃபிரான்சிஸ்கோ செருண்டோலா(அர்ஜென்டீனா, 16வது ரேங்க்), யூகோ ஹம்பர்ட்(பிரான்ஸ், 18வது ரேங்க்), அலெக்சி பாபிரின்(ஆஸ்திரேலியா, 20வது ரேங்க்), ஸ்டெபனோ சிட்சிபாஸ்(கிரீஸ், 24வது ரேங்க்) உட்பட பலர் இருக்கின்றனர். இப்படி வீரர்கள் மட்டுமின்றி முன்னணி வீராங்கனைகளும், தங்களை விட தரவரிசையில் பின்தங்கியிருக்கும் வீராங்கனைகளிடம் சரணடைந்துள்ளனர்.
உலக தரவரிசையில் 2வது இடத்தில் இருப்பவர் பிரஞ்ச் ஓபன் நடப்பு சாம்பியன் கோகோ காஃப்(அமெரிக்கா, 2வது ரேங்க்). அவர் முதல் சுற்றில் 42வது இடத்தில் இருக்கும் டயானா(உக்ரைன்)விடம் வீழ்ந்தார். அதேபோல் தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் ஜெசிகா பெகுலா(அமெரிக்கா, 3வது ரேங்க்), கின்வென் ஜெங்(சீனா, 6வது ரேங்க்), பவுளா படோசா(ஸ்பெயின், 9வது ரேங்க்), கரோலினா முச்சோவா(செக் குடியரசு, 15வது ரேங்க்) யெலனா ஆஸ்டபென்கோ(லாத்வியா, 20வது ரேங்க்) உட்பட பல முன்னணி வீராங்கனைகள் முதல் சுற்றிலேயே வெளியேறி விட்டனர். இந்நிலையில் 2வது சுற்றில் முன்னணி வீராங்கனையான ஜாஸ்மின் பாலினி(இத்தாலி, 5வது ரேங்க்)யை, கமிலா ரகிமோவா(ரஷ்யா80வது ரேங்க்) வென்றார். இப்படி தொடரும் அதிர்ச்சி தோல்விகளால் விம்பிள்டன் முடிந்த பிறகு வெளியாகும் தரவரிசைப் பட்டியலிலும் பெரும் மாற்றம் இருக்கும்.