தாய்லாந்து: கம்போடியா தலைவரை ‘மாமா’ என்றதால் தாய்லாந்து பிரதமர் அதிரடி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்துக்கும் அதன் அண்டை நாடான கம்போடியாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இந்த சூழலில், கடந்த மே மாதம் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே எல்லை தாண்டிய மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கம்போடிய வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், தாய்லாந்து பிரதமர் பேத்தோங்டன் சினவத்ரா, கம்போடிய அரசியல் தலைவர் ஹுன் சென்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்த உரையாடலின் ஆடியோ பதிவு கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், பிரதமர் பேத்தோங்டன், ஹுன் சென்னை ‘மாமா’ என்றும், தனது நாட்டு ராணுவ தளபதியை ‘எதிரி’ என்றும் குறிப்பிட்டிருந்தார். இது தாய்லாந்து ராணுவத்தை அவமதிக்கும் செயல் என்றும், கம்போடியாவிற்குப் பணிந்து போகும் செயல் என்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, பழமைவாத அரசியல் செனட்டர்கள் குழு ஒன்று, பிரதமர் பேத்தோங்டன் சினவத்ரா தனது பிரதமர் பதவிக்கான நெறிமுறைகளை மீறிவிட்டதாக அரசியலமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பு நீதிமன்றம், இன்று அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி, 7-2 என்ற பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில், பிரதமர் பேத்தோங்டன் சினவத்ராவை அவரது பிரதமர் பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை, ஜூலை 1ம் தேதி முதல் இந்த இடைநீக்கம் அமலில் இருக்கும் என்றும் நீதிமன்றம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.