கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள ஆதிபெருமாள் கோயில் கரடு என்ற இடத்தில் பெருந்துறை பகுதியை சேர்ந்த ஈஸ்வரி என்பவரது பெயரில் கல்குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரிக்கான உரிமம் கடந்த 2015ம் ஆண்டே முடிவுற்ற நிலையில் கடந்த 9 ஆண்டுகளாக சட்டவிரோதமாக இயங்கி வந்துள்ளது. இந்த கல்குவாரி குறித்து புகார்கள் வரும் போதெல்லாம் வருவாய்த்துறையினர் அங்கு ஆய்வு செய்து, குவாரிக்கு சீல் வைப்பதும், அதைத்தொடர்ந்து லோகநாதன் அந்த சீலை உடைத்து மீண்டும் சட்டவிரோதமாக கல் குவாரியை நடத்துவதும் வாடிக்கையாக இருந்துள்ளது.
கடந்த மாதம் இதேபோன்று வைக்கப்பட்ட சீலை உடைத்து கல்குவாரி செயல்பட்டு வந்து உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு கல்குவாரியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சட்டவிரோதமாக வெடி வைத்து பாறையை உடைத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு வேலை செய்த கோபி அருகே உள்ள குருமந்தூர், பூசாரியூரை சேர்ந்த செந்தில்குமார் (50), கர்நாடக மாநிலம் கர்கேகண்டியை சேர்ந்த அஜீத்குமார் (40) ஆகிய 2 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.