சென்னை: அமைதியான, தெளிந்த நீரோடை போல் உள்ள தமிழ்நாட்டில், ‘பாஜவால் அரசியல் செய்ய முடியவில்லை’ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பதுதான் பாஜவின் அரசியல். அமைதியான தெளிந்த நீரோடை போல் உள்ள தமிழ்நாட்டில், பாஜாவால் அரசியல் செய்ய முடியவில்லை. இந்தத் தெளிந்த நீரோடையை அவதூறு பேச்சு, சர்ச்சை, சாதி-மதத் துவேஷம் போன்ற அழுக்குகளைக் கொட்டி குழப்பிவிட்டு, பிறகு அரசியல் செய்ய நினைக்கிறது.
ஆனால், பல சமயங்களில் அழுக்கைக் கொட்டும்போதே பிடிபட்டு அம்பலப்பட்டு விடுகிறது. ‘யாருக்கும் தெரியாமல் அழுக்கைக் கொட்டிவிட்டோம்’ என்று நினைக்கையில், சி.சி.டி.வி காட்சிகள், சாட்சியங்களுடன் கையும் களவுமாகப் பிடிபட்டு முகமூடி கிழிக்கப்படுகிறது. பெரியார்-அண்ணா-கலைஞர் போன்றோரெல்லாம் சமூக நீதி, மாநில சுயாட்சி அரசியலைக் கையிலெடுத்து, தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தனர். அவர்களின் தொடர்ச்சியாகத்தான் நம் தலைவர் இன்று கழகத்தையும் தமிழ்நாட்டையும் வழிநடத்தி வருகிறார்.
‘தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக்கொடுத்தவர்கள்’, `நீட் தேர்வை நுழையவிட்டு, 20-க்கும் மேற்பட்டோரின் சாவுக்குக் காரணமாக இருந்தவர்கள்’, ‘ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறப்புக்கு காரணமானவர்கள்’, மக்களின் வரிப் பணத்தில் பல லட்சம் கோடி ரூபாயைச் சுருட்டியவர்கள்’ என்ற அ.தி.மு.க. மீதுள்ள ஊழல் கறையை, ரத்தக் கறையைக் கழுவிவிடப் பாஜக நினைக்கிறது. `கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம்’, தூண்டிவிடப்பட்ட `மணிப்பூர் கலவரம்’, `சி.ஏ.ஜி.’ வெளியிட்ட 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என ஏற்கெனவே ரத்தக் கறையும், ஊழல் கறையும் படிந்தவர்களால், எடப்பாடி மீதுள்ள அதே கறைகளை எப்படிக் கழுவிவிட முடியும்?
பாசிச பாஜவுக்கு அடிமையாக இருந்து மக்களின் உரிமையை விட்டுக்கொடுத்ததற்கான தண்டனையை, மக்கள் எடப்பாடி அண்ட் கோ-வுக்கு வழங்குவார்கள் என்பது நிச்சயம். எடப்பாடியின் தொடர் தோல்வியும் அதைத்தான் உணர்த்துகின்றன.‘முடியவே முடியாது’ என்றார்கள். ஆனால், கலைஞர் பெயரில் மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை வழங்கி வருகிறோம்.ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு ‘கலைஞர் நூலகம்’ அமைக்க வேண்டும் என்று தலைவர், இளைஞர் அணியை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, கிருஷ்ணகிரி தொகுதியில் முதல் ‘கலைஞர் நூலக’த்தைத் தொடங்கி வைத்தோம். கம்பம், பெரியகுளம், நாங்குனேரி, பாளையங்கோட்டை, பத்மநாபபுரம், கன்னியாகுமரி ஆகிய 6 தொகுதிகளுக்கான ‘கலைஞர் நூலக’ங்களைத் தொடங்கி வைத்துள்ளோம் என்றார்.
* பாஜவின் இன்ஸ்டன்ட் அரசியல்
தமிழ்நாட்டில் `இன்ஸ்டன்ட் அரசியல்’ செய்யும் பாஜவிடம் அவ்வளவு பொறுமை இல்லை. இன்று அவதூறு பரப்பி, நாளையே கோட்டைக்குள் சென்றுவிடவேண்டும் என்ற வெறி மட்டுமே அவர்களிடம் உள்ளது. இந்தப் போலி அரசியல் பயணத்தில் அங்கங்கு இருக்கும் சமூக விரோதிகளை எல்லாம் அள்ளிப்போட்டுக்கொண்டு, அரசியல் என்ற பெயரில், மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.