புதுடெல்லி: காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு இவ்வளவு தண்ணீர் தான் திறந்து விட வேண்டும் என்று கணக்கிட்டு தன்னிச்சையான முறையில் உத்தரவு பிறப்பிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராகவும், அதேப்போன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த விவகாரத்தில் மூன்று நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று வினாடிக்கு 5000 கன அடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு 29.8.2023 காலை எட்டு மணி முதல் 12.09.2023 வரையில் 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி ஆணையம் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உத்தரவிட்டது. இந்த நிலையில் முன்னதாக காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசு தாக்கல் செய்திருந்த மனுவுக்கு, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் உமாபதி மற்றும் குமணன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பதில் மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளனர்.
அதில், ”காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தின் போது தமிழ்நாட்டில் இருக்கும் நிலவரம், விவசாயிகளின் பாதிப்பு, மழை குறைவு ஆகிய நியாயமான காரணத்தை எடுத்துக்கூறியும் ஆணையம் அதனை ஏற்க மறுத்ததோடு, எங்களது கோரிக்கையை நிராகரித்து விட்டது. குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி 8.988 டிஎம்சி அளவிற்கு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டிருக்க வேண்டிய நிலையில், அதனை செய்ய காவிரி ஆணையம் தவறிவிட்டது. இவ்வளவு தண்ணீரை தான் தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்று கண்க்கிட்டு உத்தரவு பிறப்பிக்க காவிரி ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. காவிரி நீரை தமிழ்நாடு அரசு சரியாக பயன்படுத்தவில்லை என்ற கர்நாடகா அரசின் குற்றச்சாட்டு முழுமையான பொய்யாகும்.
2023-24 ஆண்டு என்பது நீர் பற்றாக்குறை ஆண்டாக கண்டறியப்பட்டுள்ளதால், காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் ஒரு வெளிப்படையான, நியாயமான மற்றும் புறநிலையான முறையில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய விகிதத்தை தீர்மானிக்கும் விதமாக உச்ச நீதிமன்றம் ஒரு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காவிரி ஆணையம் தரப்பிலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவிரி படுகையில் இருக்கும் நீர் தேக்கங்கள் தென்மேற்கு பருவமழையை நம்பியே உள்ளது. குறிப்பாக போதிய மழை இல்லாததால் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் அங்கிருக்கும் நீர் தேக்கங்கள் வடகிழக்கு பருவமழை மூலம் நன்மை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும்.