தஞ்சாவூர்: சிஏஜி வெளியிட்ட 7 ஊழல்கள் குறித்து பிரதமர் மோடி ஏன் வாய் திறக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தஞ்சாவூரில் நேற்று அளித்த பேட்டி: நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் ஒன்றிய அரசின் சிஏஜி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் ஏழு ஊழல்கள் அம்பலப்பட்டுள்ளன. இதில் மட்டுமே பாஜ ரூ.7.50 லட்சம் கோடி ஊழல் செய்திருப்பது வெளிவந்துள்ளது. இதன் மூலம் கடந்த 9 ஆண்டுகளில் பாஜ அரசு எத்தனை லட்சம் கோடி ஊழல் செய்திருக்கும் என்பது தெரியவருகிறது. இதற்கு பிரதமர் மோடி ஏன் வாய் திறக்கவில்லை. ஊழலுக்கு காரணமான ஒன்றிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை பதவி நீக்கம் செய்து, விசாரணை நடத்த வேண்டும்.
பாஜவின் ஊழலை கண்டித்து எங்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை பிரசார இயக்கம் நடத்தி ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் மறியல், ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. பாஜவை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, தமிழகத்துக்கு தண்ணீர்விடக் கூடாது எனக்கூறி போராட்டத்தை அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டை வஞ்சிக்கிற, துரோகம் செய்கிற கட்சி பாஜ என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக ஏன் வாய் திறக்கவில்லை? இவ்வாறு அவர் கூறினார்.