ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே இன்டர்நெட் கேபிள் பதிக்கும் பணியை தடுத்து பணம் கேட்டு மிரட்டிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவரை, போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே பென்னலூர் ஊராட்சியில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, புதிதாக தொடங்க உள்ள தொழிற்சாலைகளுக்கு இன்டர்நெட் சேவையை ஏற்படுத்தி தருவதற்காக நேற்று முன்தினம் தனியார் நிறுவனம் சார்பில், ஊழியர்கள் பூமிக்கு அடியில் இன்டர்நெட் கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது, பென்னலுர் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் யுவராஜ், கேபிள் பதிக்கும் பணிகளை தடுத்து நிறுத்தியதோடு, இப்பணிகளை மேற்கொள்ள தனக்கு பணம் தரவேண்டும், என அந்நிறுவன ஊழியர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று யுவராஜை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில், இன்டர்நெட் கேபிள் பதிக்கும் பணியை தடுத்து தனியார் நிறுவன ஊழியர்களை பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் கைதான யுவராஜியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.