சென்னை: தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இதற்கு விளக்கம் அளித்தார். தமிழக அமைச்சரவை நேற்று மாலை மாற்றம் செய்யப்படும், சில அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தகவல் பரவியது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, சேப்பாக்கம் எழிலகத்தில் நேற்று காலை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ரூ.5.12 கோடி செலவில் தரம் உயர்த்தப்பட்டுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து நிருபர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், “அமைச்சரவையில் மாற்றம் என்று தகவல் வருகிறதே” என்று கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த முதல்வர், “எனக்கு தகவல் வரவில்லை” என்றார்.
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மேலும் கேட்கப்பட்ட கேள்விகள் வருமாறு:
கேள்வி: பேரிடர் மேலாண்மை மையத்தில் என்னென்ன வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது?
முதல்வர் பதில்: எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இன்னும் என்னென்ன தேவைப்படுமோ அதையும் கொண்டு வருவோம்.
கேள்வி: கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் இதேபோல் மையம் அமைக்கப்படுமா?
பதில்: படிப்படியாக கொண்டு வரலாம் என இருக்கிறோம்.
கேள்வி: கலைஞர் நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழ்நாடு அரசின் விழாதான் என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறி இருக்கிறாரே? ஆனால் நீங்கள் அதை ஒன்றிய அரசின் விழா என சொல்லி இருக்கிறீர்கள்?
பதில்: ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிற அந்த நிகழ்ச்சியை தமிழக அரசு நடத்தியது.
கேள்வி: உங்கள் அமெரிக்க பயணத்தில் என்னென்ன முக்கியத்துவம் இருக்கும்? அங்குள்ள தமிழ் தொழில் அதிபர்களை சந்திக்கும் திட்டம் உள்ளதா?
பதில்: அமெரிக்காவில் முதலீட்டாளர்களோடு சந்திப்பு நடைபெற உள்ளது. எல்லோரையும் பார்க்கிறோம். அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய பிறகு அதன் முடிவுகளை உங்களிடம் (நிருபர்களிடம்) கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.