திண்டுக்கல்: திண்டுக்கல் – திருச்சி நான்கு வழிச்சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் – திருச்சி நான்கு வழிச்சாலையில் நந்தவனப்பட்டியில் இருந்து மின்வாரிய குடியிருப்பு அமைந்துள்ள பகுதி வரை சாலையின் இருபுறமும் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன. குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் பலத்த காற்று வீசும்போது குப்பைகள் பறந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் விழுகின்றன. இதனால் அப்பகுதிமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் நலன் கருதி, இப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், அவற்றை கொட்டுவோர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.