லூதியானா: 4 மாநிலங்களின் 5 பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. குஜராத் மாநிலத்தில் காடி, விசாவதர் ஆகிய 2 பேரவை தொகுதிகள், கேரளாவில் நிலாம்பூர் பேரவை தொகுதி, பஞ்சாப்பில் லூதியானா மேற்கு பேரவை தொகுதி மற்றும் மேற்குவங்கத்தில் காளிகஞ்ச் பேரவை தொகுதி ஆகிய 5 தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
இதில் ஒருசில இடங்களை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களுமின்றி இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்குவங்கம் காளிகஞ்ச் தொகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. இங்கு நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 69.85 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.