Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாட்டின் 2வது மிகப்பெரிய பட்டாம் பூச்சி கண்டுபிடிப்பு : மதுரையில் நடந்த கணக்கெடுப்பில் தகவல்

Butterfly, second Largest, maduraiமதுரை : இந்தியாவின் 2வது மிகப்பெரிய பட்டாம்பூச்சி மதுரையில் நடந்த கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் ‘பெரிய பட்டாம்பூச்சி மாதம்’ செப்டம்பர் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. இம்மாதத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது இடங்களில் உள்ள பட்டாம்பூச்சிகளை கணக்கெடுத்து இந்திய பல்லுயிர் இணையதளத்தில் பதிவேற்றுகின்றனர்.

கடந்த 2023ல் நடந்த பட்டாம்பூச்சி கணக்கெடுப்பின்படி இந்தியாவில் கறிவேப்பிலை அழகி இனம் 13.74 சதவீதம், ஆரஞ்சு வரியன் 11.84 சதவீதம், புல் மஞ்சள் இனம் 11.52 சதவீதம், வெண்புள்ளி கருப்பன் 9.71 சதவீதம், எலுமிச்சை அழகி 9.64 சதவீதம், மயில் வசீகரன் 9 சதவீதம், விகடன் 8.94 சதவீதம், எலுமிச்சை வசீகரன் 8.75 சதவீதம், கொன்னை வெள்ளையன் 8.62 சதவீதம், பெரிய பசலை சிறகன் 8.25 சதவீதமும் உள்ளதாக கண்டறியப்பட்டது. சுற்றுச்சூழல் மாற்றங்களால் பட்டாம்பூச்சிகளின் பாதிப்பு அறிய இக்கணக்கெடுப்புகள் விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றன.

ஒரு சூழலியல் அமைப்பில் பட்டாம்பூச்சிகள் இருப்பதே நிறைவாகும். இவ்வகையில் இவ்வாண்டு 2024ல் பெரிய பட்டாம்பூச்சி மாதம் இம்மாதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுக்க ஆர்வலர்கள் பட்டாம்பூச்சிகளை கணக்கெடுத்து இந்திய பல்லுயிர் (இந்தியா பயோடைவர்சிட்டி போர்ட்டல், ஐநேச்சுரலிஸ்ட், ஐபவுண்ட் பட்டர்பிளைஸ்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இவ்வகையில் மதுரை சத்திரப்பட்டியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி கூடுதல் வளாகத்தில் கல்லூரியின் பசுமை மேலாண்மைத் திட்ட (ஜிஎம்பி) மாணவர்கள், பேராசிரியர் ராஜேஷ் தலைமையில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் இந்தியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய பட்டாம்பூச்சி இனமான தெற்கு பேர்ட்விங் பட்டாம்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து பேராசிரியர் ராஜேஷ் கூறும்போது, ‘‘இந்த தெற்கு பேர்ட்விங் பட்டாம்பூச்சி தென்னிந்தியாவில் உள்ள மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் உள்ளன. இதற்கு முன்னதாக மதுரை அழகர்கோவில் மலையில் காணப்பட்ட இந்த இனமானது, தற்போது சத்திரப்பட்டி கல்லூரி கூடுதல் வளாகத்திற்கு வந்துள்ளது. இதன் இறக்கை நீளம் 190 மிமீ. இவ்வினம் 1932ல் இருந்து 2020 வரை இந்தியாவிலேயே மிகப்பெரிய பட்டாம்பூச்சியாக இருந்தது. 2020ல் இமயமலையில் வாழும் கோல்டன் பேர்ட்விங் பட்டாம்பூச்சி இந்த 88 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளது. கோல்டன் பேர்ட்விங் பட்டாம்பூச்சியின் இறக்கையின் நீளம் 194 மிமீ ஆகும். இதனை பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியான பிரிகேடியர் வில்லியம் ஹாரி எவன்ஸ் பதிவு செய்துள்ளார்’’ என்றார்.

கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் கூறும்போது, ‘‘கல்லூரி வளாகத்தில் அதிகளவு பூச்செடிகள், மரங்கள் வளர்த்து இயற்கை பாதுகாப்பில் கூடுதல் கவனம் காட்டப்படுகிறது. இது பட்டாம்பூச்சிகள், பறவைகள் மற்றும் பல்வேறு உயிரினங்களுக்கு புகலிடமாக மாறி வருகிறது. கல்லூரிக்குள் அதிகமதிகம் மரங்கள் நடுவதில் கூடுதல் கவனம் கொள்கிறோம்’’ என்றார்

தமிழ்நாட்டில் 319 இனங்கள்

இந்தியாவில் 1,500க்கும் அதிக பட்டாம்பூச்சி இனங்கள் உள்ளன. தமிழகத்தில் அழகிகள் எனும் தகைவிலான் வாலிகள் (19 சிற்றினம்), வெள்ளையன்கள் எனும் மஞ்சள்-வெள்ளை நிறத்திலான நுனிச்சிறகிகள் (32 சிற்றினம்), வரியன்கள் எனும் தூரிகைநார்ச்செதில்க்காலிகள் (94 சிற்றினம்), நீலன்கள் எனும் தூரிகை மயிர்கொண்ட பட்டாம்பூச்சிகள் (97 சிற்றினம்) மற்றும் தாவிகள் எனும் துள்ளித்தாவும் பட்டாம்பூச்சிகள் (77 சிற்றினம்) உள்ளிட்ட 319 பட்டாம்பூச்சி இனங்கள் பதிவாகியுள்ளன.

Country's 2nd largest butterfly Discovered in Madurai : survey Information Confirms