மதுரை: பேருந்து நிலையத்தில் அரசு பஸ் டிரைவரை செருப்பால் அடித்த வீடியோ வைரலானதையடுத்து துணை மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் போக்குவரத்து கழக பணிமனையில் தாராபுரம் அடுத்த காளிபாளையத்தை சேர்ந்த கணேசன் (51) டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் முகூர்த்த நாள் என்பதால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து மதுரைக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. பஸ்சை டிரைவர் கணேசன் ஓட்டிச் சென்றார். தாராபுரத்தை சேர்ந்த அருள் பிரகாஷ் கண்டக்டராக சென்றார்.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் வரிசையில் டிரைவர் நிறுத்தினார். அங்கிருந்த பயணிகள் அடித்து பிடித்து பஸ்சில் ஏறினர். இருக்கைகள் நிரம்பினாலும், மேலாளர் அனுமதிக்கும் நேரத்தில் தான் பேருந்து கிளம்பும் என டிரைவர் கணேசன், கண்டக்டர் அருள் பிரகாஷ் கூறியுள்ளனர். அதிகாலை 1 மணியை தாண்டிய நிலையில், சில பயணிகள், பேருந்து நிலைய அலுவலக அறையில் இருந்த மதுரை மண்டல துணை மேலாளர் மாரிமுத்துவிடம் முறையிட்டுள்ளனர்.
அவர் தன்னிடம் கேட்காமல் பயணிகளை ஏற்றியதற்காக டிரைவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், வேறு பேருந்தில் ஏறிச் செல்லுமாறும் கூறியுள்ளார். இதையடுத்து, துணை மேலாளர் உள்ளிட்ட அலுவலர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது துணை மேலாளர், பயணிகளிடம் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கு வந்த டிரைவர் கணேசனை, ஊழியர்கள் அலுவலக அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது, ‘‘பயணிகளை தூண்டி விடுகிறாயா’’ என கோபமாக கேட்ட துணை மேலாளர் மாரிமுத்து, டிரைவர் கணேசனை சரமாரியாக செருப்பால் அடித்துள்ளார். வெளியே வர முயன்றவரை, தடுத்து மீண்டும் செருப்பால் அடிக்கும் காட்சியை அங்கிருந்த பயணிகள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, துணை மேலாளர் மாரிமுத்துவை சஸ்பெண்ட் செய்து மேலாண் இயக்குநர் இளங்கோவன் அதிரடியாக உத்தரவிட்டார். இந்நிலையில் துணை மேலாளர் மாரிமுத்து பகிரங்க மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.