கோவை: சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயது தொழிலதிபர். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கோவையில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் இவர் மனைவி, பிள்ளைகளை பார்க்க கோவை வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இவரது செல்போன் எண்ணுக்கு ஆப் மூலம் கடந்த மாதம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், தொழிலதிபர் தனது மனைவி, பிள்ளைகளை பார்க்க கோவைக்கு வரக்கூடாது என்றும், வந்தால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் அழைப்பு வந்த எண் குறித்து விசாரணை நடத்தினார். இதுகுறித்து தொழிலதிபர் சென்னை கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கோவை ரத்தினபுரியை சேர்ந்த ஸ்வீட்சன் என்ற வாலிபர் என்பது தெரியவந்தது. நாராயணன் என்ற பெயரில் வாங்கிய சிம் கார்டை ஸ்வீட்சன் பயன்படுத்தி தொழிலதிபரை மிரட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை தனிப்படை போலீசார் ரத்தினபுரியில் உள்ள ஸ்வீட்சன் வீட்டிற்கு வந்து அவரை கைது செய்ய முயன்றனர்.
அப்போது போலீசாரை பார்த்த ஸ்வீட்சன் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து குடும்பத்துடன் தப்பிச் சென்றார். தற்போது அவர் கேரளாவில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதன்பேரில் தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வீட்சன் (30). இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இசை பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கோவையில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பகுதி நேரமாக இசை வாசிக்கும் பணியையும் செய்து வருகிறார்.
அப்படி இசை அமைக்க செல்லும் இடங்களில் வரும் தொழிலதிபர்களின் மகள் மற்றும் மனைவியை குறிவைத்து பழகி ஆபாசமாக போட்டோக்களை எடுத்து அவர்களிடம் பழகி பணம், நகை பறித்துள்ளார். அவர்களும் குடும்ப மானம் கருதி கேட்கும் பணம் மற்றும் நகையை கொடுத்து விடுவார்கள். இதில் சென்னையை சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மனைவியை மயக்கி அவரிடம் காதல் மொழி பேசி அதை வைத்து மிரட்டி பணம், நகை பறித்துள்ளார்.
பணத்திற்காக ஸ்வீட்சன் தனது மனைவி, சகோதரி, தந்தை என குடும்பத்தோடு சம்பந்தப்பட்ட தொழிலதிபர்களின் குடும்பத்தினரிடம் பழகி வந்துள்ளார். பின்னர் அந்த குடும்பத்தில் உள்ள பெண்களை வளைத்து பேசி தனது வலைக்குள் விழ வைப்பார்.இதற்காக ஸ்வீட்சன் சம்பந்தப்பட்ட பெண்களிடம் இருந்தே சிம் கார்டு, செல்போன் உள்ளிட்டவற்றை வாங்கிக்கொண்டு அதன் மூலமாக பேசி வந்துள்ளார்.
வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக தளங்களை பயன்படுத்தாமல் அரபு நாடுகளில் பயன்படுத்தும் ஆப் மூலம் பேசி வந்துள்ளார். இந்த ஆப்பில் பேசினால் யாரும் கண்காணிக்க முடியாது என்ற விஷயத்தை சம்பந்தப்பட்ட பெண்களிடம் கூறி பேசி வந்துள்ளார். தொழிலதிபர்கள் வெளியூர் செல்லும் சமயத்தில் அவர்களது மனைவிகளிடம் இரவு நேரங்களில் வீடியோ காலில் பல மணி நேரம் காதல் மொழி பேசி வந்துள்ளார்.
இரவு நேரங்களில் தனது மனைவி இருக்கும்போதே அவர் பல பெண்களிடம் வீடியோ கால்களில் பேசி போட்டோ எடுத்து வைத்துள்ளார். வெளியிடங்களுக்கு செல்லும் சமயத்தில் சகஜமாக போட்டோ எடுப்பதுபோல எடுத்து வைத்துக் கொள்வார். பின்னர் அந்த புகைப்படங்களை சம்பந்தப்பட்ட பெண்களின் கணவர் அல்லது தந்தையிடம் காண்பித்து விடுவேன் என கூறி லட்சக்கணக்கில் பணம், நகைகளை பறித்து விடுவார்.
இதற்கு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் உடந்தையாக இருந்து உள்ளனர். சகோதரிக்கு திருமண செலவு உள்ளது என்றும், தந்தைக்கு மருத்துவ செலவு உள்ளது எனவும் விதவிதமாக கதைகளை சொல்லி பணத்தை வாங்கி விடுவார்.மாதத்திற்கு சில ஆயிரங்களை சம்பாதித்த ஸ்வீட்சன் மற்றும் அவரது மனைவி, குடும்பத்தார் சொகுசு கார் வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து உள்ளனர். சென்னை தொழிலதிபரின் மனைவி போன்று 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஸ்வீட்சன் இதுபோல பழகி பணத்தை ஏமாற்றி பறித்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்வீட்சனின் ஆசைப்பேச்சில் மயங்கி பாதிப்படைந்த பெண்கள் இன்னும் சிலர் புகார் அளிக்க உள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.