வாணியம்பாடி: வாணியம்பாடியில் தொழிலதிபர் மற்றும் அவரது மனைவியை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் போலீஸ்காரர், பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நீலிக்கொல்லை புது தெருவை சேர்ந்தவர் இம்தியாஸ்அஹமது (66), தோல் தொழிற்சாலை உரிமையாளர். இவரது மனைவி சபிதாகுல்சும்(55). இவர்கள் வீட்டில் வாணியம்பாடியை சேர்ந்த சக்திவேல்(37) என்பவர் வேலைக்காரராக உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் இம்தியாஸ் அஹமது வீட்டிற்குள் 4 பேர் கொண்ட கும்பல் புகுந்து இம்தியாஸ் அஹமது, அவரது மனைவி மற்றும் வேலைக்காரர் சக்திவேல் ஆகியோரின் கை, கால்களை கட்டினர். அவர்களது வாயை ‘டேப்’ பயன்படுத்தி ஒட்டியுள்ளனர். பின்னர் சபீதாகுல்சும்மின் கால் கட்டை அவிழ்த்த கும்பல் நகை, பணம் உள்ள பீரோக்களை திறக்கும்படி கூறினர். அப்போது சபீதாகுல்சும் அவர்களிடம் இருந்து சாமர்த்தியமாக தப்பி கதவை மூடிவிட்டு வெளியே ஓடி கூச்சலிட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கொள்ளை கும்பலை பிடிக்க முயன்றார். அதற்குள் கொள்ளையர்கள் ெபாதுமக்களை தள்ளிவிட்டு தப்பிவிட்டனர்.
இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, 2 தனிப்படைகள் அமைத்து கொள்ளை கும்பலை தேடினர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவான உருவங்களை வைத்தும் விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொள்ளை கும்பலுக்கும் வீட்டு வேலைக்காரர் சக்திவேலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். இதில், சக்திவேல், அவரது நண்பர் இளவரசன் (49), திருப்பதியை சேர்ந்த சாந்தகுமாரி (34) ஆகிய 3 பேரும் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டதும் இளவரசனும், சாந்தகுமாரியும் திருப்பதியில் பதுங்கியுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திருப்பதிக்கு சென்று அவர்களை பிடித்தனர். பின்னர் மூவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.முன்னதாக மூவரும் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது; சக்திவேல் வீட்டு வேலை பார்த்ததுடன் அடிக்கடி பெயின்டர் வேலைக்கும் சென்றுள்ளார்.
அப்போது திருப்பத்தூர் மாவட்டம் அகரம் கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த இளவரசனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சக்திவேல், தான் தொழிலதிபரின் வீட்டிலும் வேலை செய்வதையும், அவர் மனைவியுடன் தனியாக வசிப்பதையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்தால் வசதியாக வாழலாம் என முடிவு செய்து இளவரசனுக்கு பழக்கமான ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த சாந்தகுமாரியுடன் சேர்ந்து கொள்ளை திட்டம் போட்டுள்ளனர். இதன்பிறகு 3 பேரும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் அருண்குமார் உதவியை நாடியுள்ளனர். அவர் கொடுத்த யோசனைப்படி 4 பேர் கொண்ட கொள்ளை கும்பலை ஏற்பாடு செய்து தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்க வந்துள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதற்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் அருண்குமாரை திருமலை காவல்துறை உதவியுடன் கைது செய்து வாணியம்பாடிக்கு அழைத்து வந்தனர். தொழிலதிபர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் யார், தற்போது எங்கு பதுங்கியுள்ளனர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.