கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (71). இவரது மகன் மணிகண்டன். இருவரும் சிதம்பரத்தில் பலசரக்கு மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர். நடராஜன் தனது வியாபாரத்தை மேம்படுத்த சிதம்பரத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரிடம் ரூ.15 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதற்கு கந்து வட்டி சேர்த்து ரூ.67 லட்சம் பழனிச்சாமி கேட்டுள்ளார். இதனால் நடராஜன் மயிலாடுதுறைக்கு சென்று தலைமறைவாகியுள்ளார். ஆத்திரமடைந்த பழனிச்சாமி நேற்று தனது ஆதரவாளர்களை அனுப்பி நடராஜனை காரில் கடத்தியுள்ளார். இதுகுறித்து மகன் மணிகண்டன் புகாரின்படி மயிலாடுதுறை போலீசார் விசாரணையில், நடராஜனை கடத்தியவர்கள் காரில் அவரை கடலூர் கொண்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலூர் முதுநகர் போலீசார் நேற்று மதியம் குடிகாடு பஸ் நிறுத்தம் அருகே வந்த காரை மடக்கி அதிலிருந்த நடராஜனை மீட்டனர். கடத்தல்காரர்கள் அவரது கைவிரலை துண்டித்தது தெரியவந்தது. இதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை கடத்திய சிதம்பரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (65), பாண்டியன் (55), பன்னீர்செல்வம் (70), மரியசெல்வராஜ் (64), தேவநாதன் (60) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.15 லட்சம் கடனுக்கு ரூ.67 லட்சம் கேட்டு வியாபாரியை காரில் கடத்தி கைவிரல் துண்டிப்பு: கந்து வட்டிக்கும்பல் அதிரடி கைது
0
previous post