கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பிரபல தொழில் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி நகரில், பெங்களூரு சாலையில் சென்ட்ரல் தியேட்டர் அருகில் உள்ள முகமது பஷீர் லே அவுட் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (56), பிரபல தொழிலதிபர். கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல நகை கடையின் உரிமையாளரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். மேலும், கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர் சங்க தலைவராகவும் இருந்து வந்தார். நேற்று வீட்டில் இரண்டாவது தளத்தில் உள்ள தனது அறையில் சுரேஷ் இருந்தார்.
வீட்டில் உள்ளவர்கள் மற்ற அறைகளில் இருந்தனர். காலை 7.30 மணி அளவில், சுரேஷ் தங்கி இருந்த அறையில் இருந்து, பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள், அவரது அறைக்கு ஓடி சென்று பார்த்த போது, சுரேஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது அருகில் துப்பாக்கி இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் கதறி அழுதனர். பின்னர், கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கிருஷ்ணகிரி டிஎஸ்பி (பொ) மனோகரன் மற்றும் டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில், சுரேஷ் தான் உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியால், கழுத்தின் அருகில் வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொழிலதிபர் சுரேஷ், கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? அல்லது பண விவகாரத்தில் ஏதேனும் மன உளைச்சல் அடைந்து, அதன் காரணமாக தற்கொலை செய்தாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* கடைகள் அடைப்பு
தொழிலதிபர் சுரேஷ் தற்கொலை செய்த தகவல் அறிந்ததும், கிருஷ்ணகிரி நகரை சேர்ந்த வணிகர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் அவரது வீடு அருகில் திரண்டனர். கிருஷ்ணகிரி நகரில் உள்ள அனைத்து வணிகர்களும் நேற்று கடைகளை அடைத்தனர். இதனால் கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலை, பெங்களூரு சாலை, காந்தி ரோடு, சேலம் சாலை, பழைய சப்-ஜெயில் சாலை என பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து அறியாமல், கிருஷ்ணகிரி நகருக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.