சென்னை: பணம் கொடுக்கல், வாங்கல் வழக்கில் பாஜ பிரமுகரும், பிரபல ரவுடியுமான மிளகாய் பொடி வெங்கடேஷ் கைதான நிலையில், மற்றொரு பாஜ பிரமுகர் உள்பட 2 பேரை போலீசாரின் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில், பாஜவில் இருந்து மிளகாய் பொடி வெங்கடேஷை நீக்கி கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி நடவடிக்ைக எடுத்துள்ளார். செங்குன்றம் அருகே பாடியநல்லூர், பி.டி.மூர்த்தி நகரை சேர்ந்தவர் மிளகாய் பொடி வெங்கடேஷ் (எ) கே.ஆர்.வெங்கடேஷ் (54). தமிழக பாஜவின் மாநில ஓபிசி அணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இவர் மீது தமிழகம், ஆந்திரா, கேரளாவில் செம்மரம் கடத்தல், மிரட்டல், பணமோசடி உள்ளிட்ட 60 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் ரவுடிகள் பட்டியலிலும் உள்ளார். இதுதவிர ஆவடி காவல் ஆணையரகத்தில் பணமோசடி, துப்பாக்கி வைத்து மிரட்டியது உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா தொடர்பாக இவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளாரா என்ற தகவலின்பேரில், தேர்தல் பறக்கும் படையினரால் சோதனைகள் நடத்தப்பட்டு இருந்தது.
அண்மையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்தபோது, அவரை மிளகாய் பொடி வெங்கடேஷ் நேரில் சந்தித்து, அப்புகைப்படங்களை பல்வேறு சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இது, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த தனியார் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் துணை மேலாளரான தீபன் சக்ரவர்த்தி, பாடியநல்லூரை சேர்ந்த பாஜ நிர்வாகியான கணபதிலால் என்பவரின் எலக்ட்ரிக்கல் கடைக்கு சுமார் ரூ.48 லட்சம் மதிப்பில் எலக்ட்ரானிக் பொருட்கள் சப்ளை செய்திருக்கிறார்.
அதேபோல், திருமுல்லைவாயலை சேர்ந்த கோகுலவாசன் என்பவரும், கணபதிலாலுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் எலக்ட்ரானிக் பொருட்களை சப்ளை செய்துள்ளார். எனினும், இந்த பொருட்களுக்கு உரிய பணத்தை தீபன் சக்ரவர்த்தி மற்றும் கோகுலவாசன் ஆகியோருக்கு கணபதிலால் வழங்கவில்லை. இதுதொடர்பாக, பாடியநல்லூரை சேர்ந்த மிளகாய் பொடி வெங்கடேஷை சந்தித்து பணத்தை பெறலாம் என தீபன் சக்ரவர்த்தியை கட்டாயப்படுத்தி கோகுலவாசன் அழைத்து சென்றார்.
அப்போது, மிளகாய் பொடி வெங்கடேஷை சந்தித்து விவரத்தை கூறினர். அதற்கு அவர், கோகுலவாசனிடம் ரூ.8 லட்சமும், தீபன் சக்ரவர்த்தியிடம் ரூ.12 லட்சத்தை கமிஷனாக கேட்டிருக்கிறார். இருவரும் சம்மதித்து தலா ரூ.1 லட்சத்தை முன் பணமாக கொடுத்துள்ளனர். அப்போது, ‘பணம் தாமதமாகத்தான் கிடைக்கும், அடிக்கடி என்னை தொடர்பு கொள்ள கூடாது’ என்று மிளகாய்பொடி வெங்கடேஷ் கூறியுள்ளார். 3 மாதங்கள் கடந்த நிலையில் பணத்தை மிளகாய்பொடி வெங்கடேஷ் வாங்கி கொடுக்காததால் தீபன் சக்ரவர்த்தி விரக்தியில் இருந்தார்.
இதையடுத்து, செங்குன்றம் போலீசில் தீபன் சக்ரவர்த்தி புகார் செய்தார். அதில், ‘எலக்ட்ரானிக் பொருட்கள் சப்ளை செய்த வகையில் பணத்தை திருப்பி தராத கணபதிலால் மற்றும் பணத்தை வாங்கி தருவதாக பேரம் பேசி ஏமாற்றிய மிளகாய் பொடி வெங்கடேஷ் மற்றும் வலுக்கட்டாயமாக அழைத்து சென்ற கோகுலவாசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, மிளகாய் பொடி வெங்கடேஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் காலை கைது செய்த போலீசார், நள்ளிரவு கணபதிலால், கோகுலவாசன் ஆகியோரை கைது செய்தனர்.
பிறகு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஓபிசி பிரிவு மாநில தலைவர் பதவியில் இருந்து வெங்கடேஷ் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாஜ இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த கே.ஆர்.வெங்கடேஷ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.