சென்னை: மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: பாஜ ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் எண்ணெய் நிறுவனங்கள் வணிக வகை சமையல் காஸ் சிலிண்டர் விலையை ரூ.209 உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.1898 என உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டதாக ஆரவார முழக்கம் செய்தனர். ஆனால், தற்போது வணிக நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதம் கொடுத்த விலையைக் காட்டிலும் சிலிண்டருக்கு ரூ.46 அதிகம் தர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு தேனீர் கடைகள், உணவகங்கள், தெருவோர வணிகம் என பல பிரிவினரையும் கடுமை பாதிப்பதுடன், இதன் வழி சேவை பெறும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். விலை குறைப்பு செய்தது போல் நாடகமாடி, முன்னிலும் அதிகமான விலை ஏற்றி மக்களை வஞ்சித்து வரும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், உயர்த்தப்பட்ட விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.