*பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தல்
கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் வழங்கிய ஊராட்சிக்கு சொந்தமான பொது கிணறு புதருக்குள் மறைந்திருப்பதால் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான பொது கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றின் மூலம் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த கிணற்றில் உள்ள குடிநீர் நல்ல குடிநீராக இருந்து வருகிறது.
இன்று புதருக்குள் கிணறு மறைந்திருந்தாலும் பல இடங்களில் குடிநீர் உப்பு நீராக மாறிய நிலையில் இந்த கிணற்றில் உள்ள தண்ணீர் மட்டும் சுத்தமான நல்ல குடிநீராக இருந்து வருகிறது. மாதிரவேளூர் ஊராட்சிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் இங்கு பல இடங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. ஒரு சில இடங்களில் மட்டுமே நிலத்தடி நீர் நல்ல நீராக உள்ளது. அதுவும் சற்று குறைந்த அளவு உப்பு கலந்துள்ள நீராக இருந்து வருகிறது. ஆனால் பழமையாக உள்ள பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த கிணற்றில் இன்றும் தண்ணீர் நன்றாக இருந்து வருகிறது.
இது குறித்து மாதிரவேளூர் கிராம மக்கள் கூறுகையில், மாதிரவேளூர் கொள்ளிடம் ஆற்றின் கரை பகுதியில் அமைந்துள்ளது. ஆனால் ஆற்றில் உப்பு நீர் புகுந்து விட்டதால் நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறி வருகிறது. இந்த நிலையில் கிராமத்துக்கு அனைவருக்கும் நல்ல குடிநீர் வழங்கி வந்த பெரும் கிணறு புதருக்குள் மறைந்து பயனற்று கிடக்கிறது. இந்த கிணற்றை தூர் வாரி ஆழ்படுத்தி தண்ணீர் எடுத்து பயன்படுத்துவதன் மூலம் கிராம மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்க முடியும்.எனவே ஊராட்சி நிர்வாகம் இந்த கிணறை புதரிலிருந்து வெளிக்கொணர்ந்து கிணற்றை தூர்வாரி ஆழ்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.