Sunday, February 25, 2024
Home » பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல 19,484 பஸ்கள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல 19,484 பஸ்கள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

by Ranjith

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 19,484 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் சிவசங்கர்அளித்த பேட்டி:

பொங்கல் திருநாளை முன்னிட்டு, வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,706 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 11,006 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 8,478 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 19,484 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,830 சிறப்புப் பேருந்துகளும் மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 11,130 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,459 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 17,589 பேருந்துகளும் இயக்கப்படும்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 5, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 5, தாம்பரம் சானிடோரியத்தில் 1 என முன்பதிவு மையங்கள் செயல்படும். மேலும் tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் தவிர்த்து திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்ல வேண்டும்.

* ‘நீலிக்கண்ணீர் வடிக்கும் எடப்பாடி’
அமைச்சர் சிவசங்கர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து தொழிலாளர்களுக்காக நீலிகண்ணீர் வடிக்கிறார் எடப்பாடி. 96 மாத காலமாக ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை என உங்கள் அறிக்கையிலே சொல்லியிருக்கிறீர்களே, அதை நிறுத்தியதே நீங்கள் தானே. 65 மாத காலம் அகவிலைப்படி கொடுக்காமல் இருந்தது நீங்கள் தானே.

இதை சொல்லி பேருந்தை நிறுத்தினால், மக்கள் திமுக அரசு மீது கோபப்படுவார்கள் என்பது உங்கள் கற்பனை. ஆனால் உங்கள் வேடம், உங்கள் அறிக்கையாலேயே கலைந்து விட்டது. மக்கள் உண்மையை அறிவார்கள். மக்களுக்கு இடையூறாக பொய் சொல்லி ஒரு போராட்டம் நடத்துவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’’ என்று கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

two × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi