Wednesday, February 28, 2024
Home » உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலை ஏற்று போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஜன.19ம் தேதி வரை தற்காலிக வாபஸ்!!

உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலை ஏற்று போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஜன.19ம் தேதி வரை தற்காலிக வாபஸ்!!

by Porselvi

சென்னை : ஜன.19-ல் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதால் அதுவரை போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தகவல் அளித்துள்ளனர். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து, ஜனவரி 9ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக டிசம்பர் 19ம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கின.இந்த நிலையில், இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த பி ஃபார்ம் மாணவர் பால் கிதியோன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

வழக்கின் பின்ணணி

இந்த வழக்கு இன்று காலை தலைமை நீதிபதி கங்கா புர்வாலா, நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பொங்கல் பண்டிகையின்போது இந்த ஸ்டிரைக் தேவையா என தொழிலாளர்களைப் பார்த்து கேள்வி எழுப்பினர். பின்னர், கடந்த பல ஆண்டுகளாக இதே பிரச்னை நீடித்து வருகிறது. ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படியை தர அரசு முன் வருமா?. இது தொடர்பாக அரசிடம் கேட்டு மதியம் இரண்டே கால் மணிக்கு தெரிவிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு விசாரணையை மதியத்துக்கு தள்ளி வைத்தனர்.

தமிழக அரசு வாதம்

இந்த நிலையில் பிற்பகலில் ஆஜரான தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர், “ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தற்போதைய நிலையில் அகவிலைப்படி வழங்க முடியாத நிலை உள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி வழங்க இயலாது. வேலை நிறுத்தம் என்பது அடிப்படை உரிமையில்லை.5% அகவிலைப்படி வழங்கப்பட்டுதான் வருகிறது.தொழிலாளர்களா அல்லது பொதுமக்களா என்ற நிலை உருவாகி உள்ளது,”எனத் தெரிவித்தார். மேலும் 92,000 ஓய்வூதியதாரர்களுக்கு தலா ரூ.2,000 தரலாம் என்ற நீதிமன்றத்தின் ஆலோசனையையும் ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்டது.

நீதிபதிகள் அறிவுறுத்தல்

இதனை கேட்ட நீதிபதிகள், “பஸ் ஊழியர் சங்கங்கள் அரசு தங்கள் நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருக்கக் கூடாது. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள்தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்,” அறிவுறுத்தினர்.

போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளித்துள்ளது. ஜனவரி 19ல் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதால் அதுவரை போராட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும் நாளை முதல் பணிக்கு திரும்புவதாகவும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களாக நடைபெற்று வந்த பஸ் தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது.

You may also like

Leave a Comment

4 + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi