வாலாஜாபாத்: வாரணவாசி பகுதியில் வண்டலூர் நெடுஞ்சாலையை ஒட்டி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பல்வேறு பணிகளுக்காக அரசு பேருந்தில் செல்வதற்காக, சாலையோரத்தில் பேருந்து நிறுத்தம் இல்லாததால் வெட்டவெளியில் வெயில் மற்றும் மழைக் காலங்களில் காத்திருப்பதில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இங்கு பேருந்து நிழற்குடை அமைக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாரணவாசி பகுதியில், வாலாஜாபாத்-வண்டலூர் நெடுஞ்சாலையை ஒட்டி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வாலாஜாபாத் அருகே வாரணவாசி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக 6 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் மந்தகதியில் நடைபெறுகின்றன.
முன்னதாக, இப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக, ஏற்கெனவே இருந்த அனைத்து பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அகற்றப்பட்டன. இதனால் வாரணவாசியை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் பணிகள் காரணமாக, சாலையோரத்தில் நிழற்குடை இல்லாததால், வெட்டவெளியில் வெயில் மற்றும் மழைக்காலங்களில் நின்று, நாள்தோறும் அரசு பேருந்துகளில் சென்று வருவதற்கு பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது வாரணவாசி பகுதியில் 6 வழிச்சாலை பணிகள் நிறைவு பெற்ற பகுதிகளில் பேருந்து நிழற்குடை அமைக்கப்படாததால், பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமான மக்கள் வெயிலில் அரசு பேருந்துக்காக நீண்ட நேரம் நிற்பதால் திடீரென மயங்கி விழும் அவலநிலை உள்ளது.
வாரணவாசி பகுதியில் 6 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்ற இடங்களில் மீண்டும் பேருந்து நிழற்குடை அமைக்கும்படி மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, வாரணவாசி பகுதியில் 6 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்ற பகுதிகளில், மீண்டும் பயணிகளின் பயன்பாட்டுக்காக புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்க தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.