சென்னை: ‘‘சென்னையில் பஸ் சேவை பாதிக்கப்படுவதால் காலியிடங்களில் புதிய ஓட்டுனர்களை உடனே நியமிக்க வேண்டும்’’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் கடுமையான ஓட்டுனர் பற்றாக்குறை காரணமாக 2022-23ம் ஆண்டில் மட்டும் 29.70 லட்சம் தடவை பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு காரணம் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களிலும் சேர்த்து சுமார் 700 பணியாளர்கள் ஓய்வு பெற்றனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டோர் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், நடப்பாண்டில் இன்னும் கூடுதலாக 100 பேருந்துகளை இயக்க முடியாமல் போகலாம். தமிழ்நாட்டில் உள்ள 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலும் ஒட்டுமொத்தமாக காலியாக உள்ள 30 ஆயிரத்திற்கும் கூடுதலான டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.