சென்னை: தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்துகளை கேட்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும், ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின் போது, தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அனைவரும், பொதுமக்களிடம் கருத்துகளை கேட்க வேண்டும். பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டு தமிழக அரசின் உயர் மட்டக்குழு ஆய்வு செய்து நான்கு மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறிய நீதிமன்றம் பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க குழு அமைக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், போக்குவரத்து துறை ஆணையரகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் பேருந்து கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க நிபுணர் குழு ஒன்றை நியமித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில், போக்குவரத்து ஆணையரின் தலைமையில் நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், டீசல், உதிரி பாகங்கள் மற்றும் இயக்கச் செலவுகளை பொறுத்து கட்டணத்தை உயர்த்தக் கூடிய குறியீட்டு முறையை மேற்கொள்வதற்காக முன்னேற்பாடு பணிகள் நடக்கிறது. இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட இருக்கிறது. இதற்காக சென்னை, கிண்டியில் செயல்பட்டு வரும் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து அல்லது தபால் மூலமாக தங்கள் கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* தற்போதைய பேருந்து கட்டணம் எவ்வளவு?
கடந்த 2018ம் ஆண்டில் பேருந்துகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது சாதாரண பேருந்துகளில் புறநகர் பகுதிகளில் 10 கிலோ மீட்டருக்கு ரூ.6 எனவும், விரைவுப் பேருந்துகளுக்கான கட்டணம் 30 கிலோ மீட்டருக்கு ரூ.24 எனவும், சொகுசு இடைநில்லா பேருந்துகளுக்கான கட்டணம் 30 கிலோ மீட்டருக்கு ரூ.27 எனவும், குளிர்சாதன பேருந்துகளுக்கான கட்டணம் 30 கிலோ மீட்டருக்கு ரூ. 42 எனவும் வசூலிக்கப்பட்டு வருகிறது.