புழல்: புழல் அருகே உள்ள தண்டல்கழனி பகுதியில் தனியார் பேருந்து பார்க்கிங் உள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டு, இங்கிருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்செந்தூர், தூத்துக்குடி, மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் நெல்லையை சேர்ந்த கண்ணன் (42), நாகர்கோவிலை சேர்ந்த மகேஷ் (36) ஆகிய 2 ஓட்டுனர்களும் தனியார் பேருந்தை செங்குன்றம் கொண்டு சென்று அங்கு 3 பயணிகளை ஏற்றி கொண்டு நாகர்கோவிலுக்கு புறப்பட்டனர். தண்டல்கழனி சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் செல்லும் போது, திடீரென பேருந்து முன் பக்கத்தில் தீப்பற்றியது. இதை பார்த்த பேருந்து ஓட்டுநர் பேருந்தில் வந்த அனைவரும் அலறி அடித்து கீழே இறங்கினார்கள்.
இதற்குள் தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்த செங்குன்றம் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் பேருந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது. இதனால் நேற்றிரவு செங்குன்றத்திலிருந்து புழல் நோக்கிச் செல்லும் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.