பள்ளிபாளையம்: ஐபிஎல் கிரிக்கெட் இறுதி போட்டியில் பெங்களூரு ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியை டிவியில் பார்த்து ரசித்த, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ரசிகர்கள் சிலர், நள்ளிரவு 12 மணியளவில் நான்கு ரோடு பகுதியில் திரண்டனர். அப்போது 3 டூவீலர்களில் வந்த 6 இளைஞர்கள், ஆபத்தான வகையில் சாகசம் செய்தனர். பின்னர் அவ்வழியாக வந்த அரசு பஸ்சை மறித்து, பஸ்சின் முன் குத்தாட்டம் போட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இதையடுத்து பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் குத்தாட்டம் போட்டது ஆவாரங்காடு அக்னி மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த வீரமணி, சௌரவ், யுவராஜ், தியாகு, சச்சின் மற்றும் ஒருவர் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குபதிவு செய்யப்பட்டது. கிரிக்கெட் அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இது போன்று ஈடுபட்டு விட்டதாகவும், இனிமேல் இதுபோன்ற இடையூறான செயலில் ஈடுபடமாட்டோம் என அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், அவர்களை கைது செய்து எச்சரித்து ஜாமீனில் விடுவித்தனர்.