* குலவையிட்டு, குங்குமம் வைத்து கிராமப் பெண்கள் உற்சாகம்
* நீ….ண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி
கமுதி : கமுதி அருகே முதன்முதலாக கிராமத்திற்கு வந்த பேருந்துக்கு, குலவையிட்டு, ஆரத்தி எடுத்து பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே வண்ணாங்குளம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு இதுவரை அரசு மற்றும் தனியார் பேருந்து வசதி இருந்தது இல்லை. இப்பகுதி மக்கள் கமுதி செல்ல, ஊரில் இருந்து 6 கிமீ நடந்து கமுதி – கீழ்குடி சாலைக்கு சென்றுதான் பஸ்சில் செல்ல வேண்டும்.
தங்கள் ஊருக்கு பேருந்து வசதி வேண்டி, தமிழக அரசுக்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனிடமும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அரசின் சீரிய முயற்சியால், நேற்று கமுதியில் இருந்து பம்மனேந்தல் செல்லும் பேருந்து, வண்ணாங்குளம் சென்று அதே வழியில் மீண்டும் செல்லும்படி புதிய வழித்தடம் தொடங்கப்பட்டது.
இந்த பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். மேலும் இதுவரை தங்கள் பகுதிக்கு பேருந்தே வராததால் இக்கிராம மக்கள், புதிதாக பேருந்து வந்தபோது குலவையிட்டு வரவேற்றனர். பேருந்துக்கு மாலை அணிவித்து, சந்தனம், குங்குமமிட்டு ஆரத்தி எடுத்தனர். இதுபோல் டிரைவர், கண்டக்டர்களுக்கு சால்வை அணிவித்து குலவை போட்டு வரவேற்றனர்.
பேருந்து வந்தது முதல் கிளம்பியது வரை பெண்களின் குலவை சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. தங்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு கிராம மக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த பேருந்தை திமுக மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் தொமுச பொதுச்செயலாளர் பச்சமால், அரசு பேருந்து கிளை மேலாளர் ராஜ்குமார் மற்றும் பார்த்திபனூர் முன்னாள் சேர்மன் சேது தினகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கிராம மக்கள் கூறுகையில், ‘‘எங்கள் வண்ணாங்குளம் கிராமம் வழியாக அரசு பஸ் இயக்க வேண்டுமென நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுத்திருந்தோம். எங்கள் கனவு நனவாகவில்லை. தற்போது தமிழக அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற அமைச்சருக்கு நன்றி’’ என்றனர்.