விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். விருத்தாசலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி 2 மகள்களையும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்துள்ளனர். மூத்த மகள் 12ம் வகுப்பும், இளைய மகள், 11ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை இருவரும் பள்ளிக்கு செல்வதற்காக விருத்தாசலம் கடைவீதியில் தனியார் பேருந்து ஒன்றில் ஏறினர்.
அப்போது ஒரு வாலிபர் 12ம் வகுப்பு படிக்கும் மாணவியை திடீரென பேருந்திலிருந்து கீழே இழுத்து தள்ளியுள்ளார். நிலைகுலைந்து விழுந்து மாணவியை அந்த வாலிபர் தாக்கியதுடன் என்னை காதலிக்க மாட்டாயா எனக்கூறி கையில் இருந்த பேனா கத்தியால் தலையில் குத்தியுள்ளார். இதில் தலையில் இருந்து ரத்தம் கொட்டி மாணவி மயங்கி சாய்ந்தவர். அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே அந்த வாலிபர், மற்றொரு வாலிபரின் பைக்கில் ஏறி தப்பிவிட்டார். தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் மாணவியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரணையில், அந்த வாலிபர் கோபாலபுரம் புதுரோட்டைச் சேர்ந்த அருண்குமார் என்பதும், பத்தாம் வகுப்பு படித்தபோதிலிருந்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்ததாகவும், தாயிடம் கூறியதையடுத்து அவர் அருண்குமாரை கண்டித்துள்ளார். அதன்பின் சந்திக்காமல் இருந்த அருண்குமார் நேற்று மீண்டும் மாணவியை சந்தித்து காதலிக்க வற்புறுத்தி கத்தியால் குத்தியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து அருண்குமார் மற்றும் அவருடன் வந்த வாலிபரை தேடி வருகின்றனர்.