*மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ரெட்டிச்சாவடி : கடலூர்- புதுச்சேரி சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக புதுச்சேரியில் இருந்து சிதம்பரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்தி வருகின்றன.
இதில் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் இருந்து குண்டு சாலை வழியாக பண்ருட்டி மேல்பட்டம்பாக்கம் கஸ்டம்ஸ் சாலை செல்கிறது. ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே அப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஆல்பேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
அதன் பிறகு தற்போது கடலூர் குண்டு சாலையில் இருந்து புதுச்சேரி நோக்கி செல்லும் வாகனங்களுக்கு ஆல்பேட்டை நான்கு முனை சந்திப்பு பகுதியில் பேருந்து நிறுத்த கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிறுத்துமிடம் போக்குவரத்துக்கு இடையூறாக அமையக்கூடும் என சொல்லப்படுகிறது.
ஆல்பேட்டை நான்கு முனை சந்திப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அமைவது தொடர்கதையாக உள்ளது. எனவே, புதுச்சேரி மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகளுக்கான பேருந்து நிறுத்தம் இடத்தை ஆல்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் அமைக்க வேண்டும்.
சாலையின் நடுவே அமைக்க வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவ்விடத்தை ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று பணிகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.