முசிறி: திருச்சி அருகே அரசு பேருந்து, பொக்லைன் இயந்திரம், ஜீப் மோதிய விபத்தில் பெண் ஆர்டிஓ பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் படுகாயம் அடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா திருக்கட்டளை அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஆரமுத தேவசேனா (51). இவர் திருச்சி மாவட்டம் முசிறியில் வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ) பணியாற்றி வந்தார். இவரது கணவர் பிரகாஷ் அரசு ஊழியர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், திருச்சியில் நேற்று சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முசிறி ஆர்டிஓ ஆரமுத தேவசேனா(51) அரசு ஜீப்பில் திருச்சி நோக்கி வந்துள்ளார். ஜீப்பை துறையூரை சேர்ந்த டிரைவர் பிரபாகரன் ஓட்டி வந்துள்ளார்.
திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் அருகே, திருச்சியில் இருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்து சாலையின் நடுப்பகுதியை தாண்டி வந்துள்ளது. அப்போது எதிரே வந்த ஆர்டிஓவின் ஜீப்பில், பேருந்து மோதியது. இதனால் நிலைதடுமாறிய ஜீப் டிரைவர் பிரபாகரன் விபத்தை தவிர்ப்பதற்காக இடது புறமாக திருப்பியுள்ளார். அப்போது சாலை ஓரம் விரிவாக்க பணிக்காக குழி பறிக்க நின்றிருந்த பொக்லைன் இயந்திரத்தின் மீது வேகமாக மோதியது. இதில் ஜீப்பின் முன்பகுதி சுக்கு நூறாக நொறுங்கி, முன் சீட்டில் இருந்த ஆர்டிஓ ஆரமுத தேவசேனா இடிபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த டிரைவர் பிரபாகரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.