திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூர், புதிய பேருந்து நிலையம் வழியாக திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்திற்கு 45டி என்ற அரசு பஸ் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சை நேற்று முன்தினம் பல்லடத்தை சேர்ந்த தாமரைக்கண்ணன் (45) என்பவர் ஓட்டி சென்றார். அவர், செல்போன் பேசிய படியும், இரு கைகளையும் ஸ்டீயரிங்கில் இருந்து எடுத்து விட்டு செல்போனுக்கு ஹெட்செட் குத்தியபடி அஜாக்கிரதையாக பஸ்சை இயக்கி வந்துள்ளார். இதனை பஸ்சில் பயணித்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அஜாக்கிரதையாக செயல்பட்ட டிரைவர் மீது துறை ரீதியான நடவடிக்கை வேண்டுமென பலரும் அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ வைரலான நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல அலுவலகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அஜாக்கிரதையாக பஸ்சை இயக்கிய டிரைவர் தாமரைக்கண்ணனை சஸ்பெண்ட் செய்து திருப்பூர் மண்டல மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.