பண்ருட்டி என்றதும் நமக்கு பலாப்பழம்தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு பண்ருட்டியும் பலாப்பழமும் பிரிக்க முடியாத அம்சங்கள். இந்த இரண்டு பெயர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதன்பெயர் பண்ருட்டி பலாத்திருவிழா. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழ்மாம்பட்டு கிராமம் நாலோடை பகுதியில் இயங்கிவரும் பண்ருட்டி பலா மேம்பாட்டுக்குழு மற்றும் தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழா அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் நடந்தேறியது. இவ்விழா குறித்த சில துளிகள்:
*விழாவில் வேளாண் மற்றும் தோட்டக்கலை திட்டங்கள், பயிர் சாகுபடி, பலாவின் ரகங்கள், பயன்கள் குறித்தும் மத்திய, மாநில அரசின் பங்களிப்புகள் குறித்தும் வேளாண் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். பலா இலை, பிஞ்சு, காய், பழம், பழத்தின் ஈக்கு, சுளை, கொட்டை, மரம் ஆகியவற்றின் சிறப்புகள் குறித்து கூறப்பட்டதோடு பலாவை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவது, வருமானத்தை பன்மடங்காகப் பெருக்குவது குறித்தும் விளக்கப்பட்டது.
*பலாச்சுளை சாறு, பலா வத்தல், பலாக்கொட்டை அவியல், பலாச்சுளை அல்வா, பலா பிரியாணி, பலாச்சுளை ஐஸ்கிரீம், பலா சாக்லெட், பலா பிஸ்கட், பலா பஜ்ஜி என பலாவின் மதிப்புக்கூட்டிய பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.
*நாட்டுப் பலா கன்றுகள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மரபு அரிசி, அவல் வகைகள், நாட்டுச் சர்க்கரை, மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள், தின்பண்டங்கள், நாட்டுக் காய்கறி, கீரை விதைகள் போன்றவையும் கண்காட்சியில் இடம் பெற்றன. கூடுதலாக மரபு நெல் ரகங்களின் கண்காட்சி மற்றும் மரபு மரங்களின் விதைகள் கண்காட்சி என விழா களைகட்டியது.
* அதிக சுவையுடைய பலா மற்றும் அதிக எடையுடைய பலாவின் உரிமையாளர் தேர்வு செய்யப்பட்டு பரிசுப்பொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பலாப் பழத்துக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு காரணமாக இருந்த மாளிகப்பட்டு ராமசாமிக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
* இந்தியக் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற சரண்யா, ராஜபிரபு ஆகியோர் கலந்துகொண்டு விழா குறித்துப் பேசினர்.
*அரசு திட்டங்கள், சந்தை வாய்ப்பு, மதிப்புக்கூட்டு பொருட்களுக்கான பல்வேறு உதவிகள் குறித்தும் விழாவில் விளக்கம் தரப்பட்டது.