சென்னை: பங்களாவில் பெண் கொலையான வழக்கில் தலைமறைவான காவலாளி மற்றும் அவரது 2வது மனைவியை பல்லடத்தில் போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜாய் களஞ்சியம். செல்வராஜ்க்கு சொந்தமான பங்களா, திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் உள்ள மதுரை சாலையில் உள்ளது. கடந்த 15ம் தேதி இந்த வீட்டில் தனியாக இருந்த ஜாய் களஞ்சியம், பங்களா காவலாளி ராஜாவால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, வத்தலக்குண்டு போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான ராஜா (40) மற்றும் அவரது 2வது மனைவி பத்மா (35) ஆகியோரை தேடி வந்தனர். இதற்கிடையே கடந்த 17ம் தேதி ராஜா தப்பிச் சென்ற கார், திண்டுக்கல்லில் சிக்கியது. நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன், வத்தலக்குண்டு இன்ஸ்ெபக்டர் முருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார், பல்லடத்தில் பதுங்கியிருந்த ராஜாவையும், அவரது 2மனைவி பத்மாவையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 2 கிராம் தங்க தோடுகள் மற்றும் விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.