பெர்த்: பெர்த்தில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்சில் இந்திய அணி 150 ரன்களுக்குள் சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா 18 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுகுறித்து பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் கூறுகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவாக பவுலர்கள் தங்களின் ரிதத்தை பிடிப்பதற்கு குறைந்தபட்சம் 3 முதல் 4 பந்துகளையாவது எடுத்து கொள்வார்கள்.
ஆனால் பும்ரா தனது முதல் பந்தில் இருந்தே நல்ல ரிதத்தில் பந்து வீசுகிறார். பும்ராவின் பந்துவீச்சு மறைந்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மால்கம் மார்ஷலை போல் இருக்கிறது. எந்த நேரத்தில் பவுலிங் செய்ய வந்தாலும் நல்ல ரிதத்திலயே பந்து வீசுகிறார். மால்கம் மார்ஷல் ஒரு முறை கூட தனது முதல் ஸ்பெல்லில் எதிரணி பேட்ஸ்மேன்களை ரன்கள் எடுக்க விட்டதில்லை. தற்போது பும்ரா அப்படி தான் செயல்படுகிறார் என்று தெரிவித்துள்ளார். பவுலிங்கில் ஒற்றை ஆளாக பும்ரா அசத்தி வருவது இந்திய அணி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.