சாயல்குடி: கடலாடி அருகே கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே மங்களம் கிராமத்தில் அமைந்துள்ள பூரணதேவி, புஷ்கலா தேவி உடனுறை மங்கள அய்யனார், மங்கள விநாயகர், கருப்பணசாமி, சேம குதிரைகள் மற்றும் கிராம பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி இன்று காலை பெரியமாடு மற்றும் சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
சுமார் 4 கி.மீ. தூரம் வரையிலான பெரியமாடு போட்டியில் 12 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. இதில் தூத்துக்குடியை சேர்ந்த விஜயகுமாரின் மாடுகள் முதலிடமும், ராமநாதபுரம் மாவட்டம், மேலச்செல்வனூர், வீரக்குடி முருகய்யனாரின் மாடுகள் 2ம் இடமும், புதுக்கோட்டை மணியின் மாடுகள் 3ம் இடமும் பெற்றன. இதேபோல, சுமார் 3 கி.மீ. தூரம் நடந்த சின்னமாடு போட்டியில் 16 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. இதில் ராமநாதபுரம் சித்திரங்குடி ராமமூர்த்தியின் மாடுகள் முதலிடமும், தூத்துக்குடி விஜயகுமாரின் மாடுகள் 2ம் இடமும், தளவாய்குளம் ராமரின் மாடுகள் 3ம் இடமும் பெற்றன. வெற்றிபெற்ற மாடுகளின் உரிமையாளர்கள், சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை கடலாடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.