Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புல்டோசர் நீதி- சரியான அணுகுமுறை அல்ல குற்றம் சாட்டப்பட்டாலே வீடுகளை இடிப்பீர்களா? உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் பள்ளி ஒன்றில் இஸ்லாமிய பள்ளி மாணவன் தனது வகுப்பில் படிக்கும் இந்து மாணவன் ஒருவரை சண்டையின் போது கத்தியால் குத்தியதில் அந்த மாணவன் இறந்து விட்டான். இதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான பொருள் சேதமும் ஏற்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இஸ்லாமிய மாணவனின் தந்தை ரஷீத் கானின் வீடு உதய்ப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக ஆக்கப்பட்டது.

இத்தகைய புல்டோசர் கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே அரியானா, உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இவ்வாறு புல்டோசர்கள் கொண்டு வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுடன் சேர்த்து மேற்கண்ட இரு மனுக்களும் நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘சுமார் 50, 60 ஆண்டுகள் வாழ்ந்து வரும் வீடுகள் கூட இடிக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் கேள்வியாகி உள்ளது என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,\\”பல ஆண்டுகளாக குடியிருந்த வீடுகளை திடீரென ஆக்கிரமிப்பு என்று கூறி இடிப்பது ஏன்? என்று சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு கேள்வி எழுப்பினார்கள்.

இதையடுத்து மாநிலங்களின் தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘ஆக்கிரமிப்பு இடங்கள் மீது நோட்டீஸ் வழங்கிய பிறகுதான் இடிக்கபடுகிறது. இதில் சட்டத்திற்கு புறம்பாக எந்தவித நடவடிக்கைகளும் கிடையாது என்று தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு, ‘‘பல ஆண்டுகாளாக குடியிருக்கும் வீடுகள் மீது சில குற்றச்சாட்டுகள் எழுகிறது என்றால், உடனடியாக அது ஆக்கிரமிப்பு நிலத்தில் இருப்பதாக நோட்டீஸ் பிறப்பிக்கின்றர். இதைத்தொடர்ந்து வீடுகள் புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில், ‘‘புல்டோசர் பயன்படுத்தும் விவகாரம் குறித்து அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தும் விதமாக நாடு தழுவிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். குறிப்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டால் உடனே புல்டோசர் மூலம் குற்றம்சாட்டப்பட்டவரின் வீடுகளை இடிப்பீர்களா?. அவ்வாறு கண்டிப்பாக செய்ய முடியாது. அது சட்டப்படி குற்றமாகும். என்று சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சரமாரி கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இதுபோன்ற புல்டோசர் நீதிக்கு எதிரான வழக்கில் வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து, அது உத்தரவாக பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.