Monday, April 22, 2024
Home » பில்டப் கொடுத்துட்டு போனாரு, இப்ப ‘சீட்’டை பறிகொடுத்து நிக்கிறாரு என தேனிக்காரரை தொண்டர்கள் வாருவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

பில்டப் கொடுத்துட்டு போனாரு, இப்ப ‘சீட்’டை பறிகொடுத்து நிக்கிறாரு என தேனிக்காரரை தொண்டர்கள் வாருவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Karthik Yash

‘‘இலைக்கட்சி தலைவரை நோக்கி மார் தட்டும் நிர்வாகி பற்றி சொல்லுங்க..’’ என்று ஆரம்பித்தார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரின் ஊரில் கோஷ்டி மோதல் நாளுக்கு நாள் அதிகரிச்சிக்கிட்டே வருதாம். மாங்கனி புறநகர் மாவட்டத்தில் இருந்த ஒன்றியம் ஒன்றை மாநகருக்குள் கொண்டு வந்தாங்களாம். அந்த ஒன்றிய நிர்வாகி, இலைக்கட்சி தலைவரின் நிழலானவருக்கு ரொம்பவே நெருக்கமாம். மம்மி காலத்துல இலவச திருமணங்களை நடத்தி பெயர் பெற்றவராம். ஆனா, அதன் பிறகு கட்சியிலிருந்து வெளியேறி, யானை சின்னத்துல நின்று தோல்வி அடைஞ்சவராம். இலைக்கட்சி தலைவரின் கடைக்கண் பார்வையால், ஒன்றிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருக்காரு. நாளடைவில் அவரது செயல்பாடு இலைக்கட்சி தலைவருக்கு திருப்தியா இல்லையாம். பூத் கமிட்டி அமைப்பதில் பெரும் சுணக்கமா இருப்பதாக தொடர்ந்து புகார் வந்திருக்கு. இந்த தகவல் தெரிஞ்சதும் கட்சியின் நிகழ்ச்சிக்கு போவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திட்டாராம். இதனால இனிமேல் இந்த கட்சியில் நீடித்தால் எனது கவுரவம் என்னாவதுன்னு ராஜினாமா கடிதத்தை எழுதியிருக்காரு. அதனை தூக்கிக்கிட்டு நிழலானவரிடம் போய் காட்டியிருக்காரு. அவரும் கடிதத்தை படிச்சி பார்த்துட்டு சம்மதம் தெரிவிச்சிருக்காரு. அதே வேகத்தோட இலைக்கட்சி தலைவரை போய் சந்திச்சிருக்காரு. வெளியே வந்த அவர், ராஜினாமா கடிதம் கொடுத்துட்டேன். ஆனா, என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு யாருக்கும் திராணியில்லைன்னு கட்சிக்காரர்களிடம் மார்தட்டுகிறாராம். ராஜினாமா கடிதம் கொடுத்தும் தூக்கலைன்னா, ரொம்பவே பவர்புல்லான ஆளா இருப்பாரோன்னு சொல்லிட்டு போறாங்களாம் கட்சிக்காரங்க. உண்மையில் அவர் ராஜினாமா கடிதமே கொடுக்கலைங்கிற விவகாரம் தெரிஞ்சிபோன ரத்தத்தின் ரத்தங்கள் சிரிப்பாய் சிரிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
கடைகோடி மக்களவை தொகுதியில் 10வது முறை போட்டியிட இந்த முறை பொன்னானவருக்கு வாய்ப்பு இல்லை என்பது ஏறக்குறைய உறுதியாகி வருகிறதாம். ஆனால் ஆளுநராகும் வாய்ப்பு தேடி வருகிறதாம். மேல்மட்ட அளவில் சென்னையில் அழைத்து பேசவும் செய்தார்களாம். ஆனால் வெளிப்படையாக அவர் மறுத்தாலும் உள்ளூர அந்த வாய்ப்பை ஏன் தவற விட வேண்டும் என்று எண்ணத் தொடங்கியுள்ளாராம். அதனால்தான் தொகுதியில் கடலோர பகுதிகளை ‘கவர்’ செய்யும் செயல்பாடுகளை எல்லாம் சற்று நிறுத்தி வைத்துள்ளாராம். அப்படியெனில் யார் வேட்பாளர்? என்ற கேள்விக்கு பதிலாக நாக்பூர் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் மாவட்ட பொறுப்பில் உள்ளவரின் உறவினரான பெண்மணி ஒருவரை நிறுத்த திட்டம் உள்ளதாம். கூடவே லோக்கல் தாமரை தலைவரின் பெயரும் பட்டியலில் இருக்கிறதாம். இதுதான் லேட்டஸ்ட் நிலவரம் என்கின்றனர் தாமரை கட்சியினர்.
‘‘ஆதரவுக் குரல் ஒன்னு கூட இல்லையேன்னு ஆதங்கப்பட்டாராமே..’’
‘‘ஹனிபீ நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பேச்சாளர்கள் கலந்துக்கிட்டாங்க… நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் பேசும்போது, கை தட்டுவதும் விசில் அடிக்கிறதுமா அரங்கமே அல்லோகலப்பட்டுச்சு… இதுல தேனிக்காரர் அணியின் பிரச்சார பிரங்கியா இருக்கிறவர், பேசுவதற்கு வரும்போது அவருக்கு ஆதரவா குரல் கொடுக்கிறதுக்கு அரங்கத்தில் ஆள் யாரும் இல்லையாம். இதனால பிரச்சார பீரங்கி பேசும்போது அரங்கமே அமைதியா உற்சாகமே இல்லாமல் கிடந்துச்சு… ‘இலைக் கட்சியில சேலத்துக்காரருக்கு பின்னால குண்டர்கள் இருக்காங்க…. எங்க பின்னாடி தான் தொண்டர்கள் எல்லாம் இருக்காங்கன்னு’ தேனிக்காரர் ஊர் ஊரா பேசிக்கிட்டிருக்காரு.. ஆனால், அவரது மாவட்டத்துல நடக்கக்கூடிய நிகழ்ச்சியில், அவரது நெருங்கிய ஆதரவாளரை உற்சாகப்படுத்தக்கூட யாருமே இல்லையே என சேலத்துக்காரர் தரப்பினர் கிண்டலடித்து இருக்கின்றனர். இதே நிலைமை தொடர்ந்தால் தேர்தலில் ரொம்ப கஷ்டம்தான் போல என தேனிக்காரர் தரப்பினர் புலம்பி வருகின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதிய மொந்தையில் பழைய ‘கள்’ புலம்பும் எம்எல்ஏக்கள் யார்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜ கூட்டணியில் ஆட்சி நடத்தும் புல்லட்சாமி பேச்சை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கேட்பது கிடையாதாம். கடந்த மாதத்தில் நடந்த அரசு விழாவில் ஆட்சியாளர்களுக்கு மக்கள் பிரச்னை தெரிவதில்லை. அறைக்குள் இருந்து விடுகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் தான், வெளியில் உள்ள பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது என புல்லட்சாமி, ஆவேசமாக பேசினார். அதனை தொடர்ந்து புதுவை, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டனர். இதிலும் அரசியல் வேலை உள்ளதாக என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள், பாஜ மீது சந்தேகம் கொள்கின்றனர். இரண்டு ஆட்சியர்களும் நேர்மையான அதிகாரிகள். காரைக்காலுக்கு சென்ற பெல் பெயர் கொண்ட ஆட்சியர், ஸ்மார்ட் சிட்டி பொறுப்பில் இருக்கும்போது புல்லட்சாமி நேரில் வர அழைத்தும் வராதவர். புதுவைக்கு வந்த துங்கன் ஆட்சியர், காரைக்காலில் உள்ள ஆளுங்கட்சி எம்எல்ஏவின் கூறும் திட்ட பணிகளை புல்லட்சாமி கூறியும் செய்யாதவர். இதனால் காரைக்காலில் ஆளுங்கட்சி எம்எல்ஏ, அவரிடம் நேரிடையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். அப்போது பவர்புல் பெண்மணி சொன்னால் செய்து தருகிறேன் எனக்கூறி அனுப்பி வைத்தாராம். இரண்டு ஆட்சியர்கள் மாற்றத்தால் எந்த விடிவுகாலம் நடக்கப்போவதில்லை. புதிய மொந்தையில் பழைய ‘கள்’ என என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் புலம்பிக் கொண்டு இருக்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேனிக்காரரை ஏன் நக்கலடிக்கிறாங்களாம்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தொண்டர்களை மீண்டும் உற்சாகப்படுத்த தேனிக்காரர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அல்வா மாவட்ட கூட்டத்தில் மட்டும் உடல்நிலை காரணமாக கலந்து கொள்ள முடியாத அவர் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலெல்லாம் சேலம்காரரை வழக்கத்தை விட கடுமையாக வறுத்தெடுத்தாராம்.வரும் நாடாளுமன்ற தேர்தலில் நம்முடன் பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இன்னும் 10 நாட்களில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். சேலம்காரர் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் சின்னத்தை முடக்கி கட்சியை கைப்பற்றி விடுவோம் என்றெல்லாம் பில்டெப் கொடுத்துச் சென்றார். இதைக்கேட்டு உற்சாகமான தொண்டர்கள் அவர் கெடு வைத்த 10 நாட்களுக்குள் சட்டசபையில் இருந்த இடத்தையும் பறி கொடுத்துவிட்டு பரிதாபமாக நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க…. இன்னும் பேசுங்க …. இன்னும் கிடைக்கும் என்று அதிமுக நிர்வாகிகள் அவர்களைப் பார்த்து நக்கலடிக்கின்றரனாம்..’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

16 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi