* அதிமுக ஆட்சியில் மனு அளித்தவருக்கு இப்போது தீர்வு
* திருப்பத்தூர் கலெக்டர் உத்தரவால் உடனடி நடவடிக்கை
வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே மாற்றுத்திறனாளி ஒருவர் எருமை மீது பயணித்த வீடியோ வைரலான நிலையில், அவரது வீட்டிற்கே சென்று அதிகாரிகள் 3 சக்கர சைக்கிள் வழங்கினர்.
அதிமுக ஆட்சியில் மனு அளித்து முயற்சியை கைவிட்டவருக்கு, திமுக ஆட்சியில் கலெக்டர் உத்தரவால் தீர்வு கிடைத்திருப்பதாக அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா(62), 2 கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி.
இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இவரது மகன், மகள்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், ராஜாவால் நீண்ட தூரம் நடக்க முடியாததால் சக்கர நாற்காலி கேட்டு கடந்த அதிமுக ஆட்சியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்தபோது கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் அவருக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்தவர் மீண்டும் மனு கொடுக்க தனியாக செல்ல முடியாத சூழலில் அந்த முயற்சியை கைவிட்டுள்ளார்.
இந்நிலையில், ராஜாவால் குறிப்பிட்ட தொலைவு செல்வதற்கு சிரமம் ஏற்படுவதனாலும், அவரிடம் சக்கர நாற்காலி இல்லாததாலும் அவர் வளர்க்கும் கால்நடையான எருமை மாட்டின் மீது பயணம் செய்து தேவைகளையும் பூர்த்தி செய்து வந்துள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பரவ செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ், உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி, ராஜாவின் தேவைகளை பூர்த்தி செய்ய உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் முருகேசன் மற்றும் மாவட்ட முடக்கு நீக்க அலுவலர் இனியன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேற்று முன்தினம் நேரில் சென்று ராஜாவை காரில் கலெக்டர் அலுவலகம் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு புதிய தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள மூன்று சக்கர சைக்கிளை அவரின் வீட்டிற்கே கொண்டு சென்று அதிகாரிகள் வழங்கினர். தொடர்ந்து, ராஜாவுக்கு விரைவில் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதிமுக ஆட்சியில் மனு அளித்து முயற்சியை கைவிட்ட மாற்றுத்திறனாளிக்கு திமுக ஆட்சியில் மனு அளிக்காமலே தீர்வு கிடைத்தது அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.